செய்திகள்

பாரதிய ஜனதாவுக்கு மாற்றாக எதிர்க்கட்சிகளை வலுவாக்கும் பொறுப்பு காங்கிரசுக்கு உள்ளது - தேவேகவுடா

Published On 2019-06-25 06:58 GMT   |   Update On 2019-06-25 06:58 GMT
பாரதிய ஜனதாவுக்கு மாற்றாக எதிர்க்கட்சிகளை வலுவாக்கும் பொறுப்பு காங்கிரசுக்கு உள்ளது என்று தேவேகவுடா கூறியுள்ளார்.

பெங்களூரு:

மதசார்பற்ற ஜனதா தளம் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பாரதிய ஜனதாவுக்கு மாற்றாக வலுவான அரசியல் கட்சிகள் உருவாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் மதசார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து வலுவான சக்தியாக மாற வேண்டும். அவ்வாறு ஒரு சக்தியை உருவாக்கும் ஆற்றல் காங்கிரசுக்குத்தான் இருக்கிறது.

இதை தங்களது பொறுப்பாக உணர்ந்து காங்கிரஸ் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் தோல்வி, மதசார்பற்ற கட்சிகளுக்கு தங்களது பொறுப்பை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறது.

இதை காங்கிரஸ் கட்சி சரியாக பயன்படுத்தி பிராந்திய கட்சிகளை எல்லாம் ஒரே குடையின் கீழ் கொண்டு வர வேண்டும். இது, மிகப்பெரிய சக்தியாக திகழ வேண்டும்.


சமீபத்தில் நான் டெல்லி சென்றபோது ராகுல் காந்தியை சந்தித்தேன். அப்போது அவரிடம் இந்த வி‌ஷயங்களை சொல்லி இருக்கிறேன். அவர் தலைவர் பதவியை விடக் கூடாது என்றும் வற்புறுத்தி இருக்கிறேன்.

கர்நாடகாவை பொறுத்த வரை காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் இடையே சில பிரச்சினைகள் இருக்கத் தான் செய்கின்றன. ஆனாலும், இவை தீர்வு காணும் பிரச்சினைகள்தான்.

இரு கட்சிகளுமே இப்போது அடிப்படை ரீதியாக கட்சிகளை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் எங்களுக்கு ஏற்பட்ட தோல்வியால் வேதனை அடைந்து இருக்கிறோம். ஆனால், எங்களது தவறுகளை திருத்திக் கொள்ள இதுதான் சரியான சந்தர்ப்பம் என்பதையும் உணருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News