செய்திகள்

கேரளாவில் மீண்டும் பரவலாக மழை

Published On 2019-06-25 05:44 GMT   |   Update On 2019-06-25 05:44 GMT
தென்மேற்கு பருவமழை தொடங்கி 17 நாட்கள் ஆன நிலையில் மீண்டும் கேரள மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்யத் தொடங்கி உள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக 8-ந்தேதி தொடங்கியது. அதன்பிறகு மாநிலத்தின் பல பகுதிகளிலும் தீவிரமாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அரபிக்கடலில் உருவான வாயு புயல் காரணமாக ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு மழை பொழிவு குறைந்து போனது. தொடர்ந்து மாநிலம் முழுவதும் லேசான சாரல் மழையே கொட்டியது.

தென்மேற்கு பருவமழை தொடங்கி 17 நாட்கள் ஆன நிலையில் மீண்டும் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்யத் தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் முதல் தொடங்கிய மழை மலைக்கிராமங்களில் மிக பலத்த மழையாக கொட்டியது.

பாலக்காடு பகுதியில் நேற்று 2 செ.மீ அளவுக்கு மழை பெய்தது. இது போல இடுக்கி, கண்ணூரில் தலா 1 செ.மீ. மழை பெய்தது.

திருவனந்தபுரத்தில் 0.5 மி.மீ அளவுக்கே மழை பெய்தது. தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் வழக்கமாக ஆண்டுதோறும் 3 ஆயிரம் மி.மீ அளவுக்கு மழை பெய்யும். இப்போது இந்த அளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. ஓராண்டுக்கு சுமார் 110 நாட்கள் கேரளாவில் மழை பெய்யும். இது இப்போது 75 நாட்களாக குறைந்து போனது. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் கேரளாவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News