செய்திகள்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி பலி - சிறுவன் உயிருடன் மீட்பு

Published On 2019-06-25 05:35 GMT   |   Update On 2019-06-25 05:35 GMT
நெல்லூரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி பலியானார். சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான்.
நகரி:

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பெத்தா பாளையம் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது.

அங்குள்ள பள்ளியில் தண்ணீர் இல்லாததால் ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளி அருகே ஆழ்துளை கிணறு பணி நடந்தது. சுமார் 40 அடி ஆழம் தோண்டப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஈஸ்வர் ராவ் - நாகம்மாள் தம்பதியின் 3 வயது மகள் மோக்ஷிதாவும், தாத்தையா- பொலம்மாள் தம்பதியின் மகன் கோபி ராஜூ (வயது 4) ஆகியோர் நேற்று மாலை 3 மணி அளவில் ஆழ்துளை கிணறு அருகே விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் மோக்ஷிதா, கோபிராஜூ இருவரும் அடுத்தடுத்து விழுந்தனர்.

அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் குழந்தைகளை மீட்க முயற்சி செய்தனர். ஆனால், இருவரும் அதிக ஆழத்தில் சிக்கி இருந்தனர். இதையடுத்து ஆழ்துளை கிணறு அருகே பள்ளம் தோண்டினர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து வந்தனர். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரசன்னகுமார் ரெட்டியும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியை விரைவுப்படுத்தினார்.

சிறுவன் கோபிராஜூ 10 அடி ஆழத்தில் சிக்கி இருப்பதும், சிறுமி மோக்ஷிதா 25 அடி ஆழத்தில் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து ஆழ்துளை கிணறு குழிக்குள் ஆக்சிஜன் அனுப்பப்பட்டது. மீட்பு பணியை துரிதப்படுத்தினர்.

இதில் சிறுவன் கோபி ராஜூவை மாலை 6 மணிக்கு மீட்டனர். உடனே அவனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மோக்ஷிதாவை மீட்கும் பணி நடந்தது. இரவு 9.30 மணிக்கு சிறுமியை ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். அப்போது அவள் சுய நினைவின்றி இருந்தாள். உடனே ஆம்புலன்ஸில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் பெற்றோர் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுமி குடும்பத்துக்கு முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். ரூ.5 லட்சம் நிதி உதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News