செய்திகள்

என்ஐஏ அமைப்பை மேலும் வலுவாக்க 2 சட்டத்திருத்தம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Published On 2019-06-24 11:58 GMT   |   Update On 2019-06-24 11:58 GMT
தேசிய புலனாய்வு முகமையை மேலும் வலுவுள்ள அமைப்பாக மாற்ற வகை செய்யும் 2 சட்டத்திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது.
புதுடெல்லி:

மும்பையில் 166 பேரை பலிவாங்கிய பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு 2009ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அமைக்கப்பட்டது. பயங்கரவாதக் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.  மாநிலங்களில் நடைபெறும் பயங்கரவாதம் தொடர்புடைய வழக்குகளை இந்த அமைப்பு நேரடியாக விசாரிக்கிறது.

இந்நிலையில், என்ஐஏ அமைப்பை மேலும் வலுவுள்ள அமைப்பாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 2 சட்டத்திருத்தங்களை கொண்டு வர உள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த இரண்டு சட்டத்திருத்த மசோதாக்களும் வரும் நாட்களில், தேசிய புலனாய்வு முகமை சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் என்ற பெயரில் தனித்தனியாக தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சைபர் குற்றங்கள் மற்றும் ஆட்கடத்தல் வழக்குகளையும் என்ஐஏ விசாரிக்க இந்த சட்டத்திருத்தம் அனுமதி அளிக்கும். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 4வது அட்டவணையில் செய்யப்பட்டுள்ள திருத்தமானது, பயங்கரவாத தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபரை பயங்கரவாதியாக பட்டியலிட்டு விசாரிக்க என்ஐஏ-வுக்கு அனுமதி வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தற்போது பயங்கரவாத தொடர்புடைய அமைப்புகளை மட்டுமே பயங்கரவாத அமைப்புகளாக பட்டியலிட்டு விசாரணை நடத்த சட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News