செய்திகள்

12 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள்- பிரதமர் மோடி ஆலோசனை

Published On 2019-06-24 10:05 GMT   |   Update On 2019-06-24 10:05 GMT
12 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களாக யார் யாரை தேர்வு செய்யலாம் என்று பிரதமர் மோடி தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார். மத்திய உள்துறை அமைச்சகமும் புதிய கவர்னர் பட்டியலை தயாரித்து கொடுத்துள்ளது.
புதுடெல்லி:

7 மாநில கவர்னர்களின் பதவி காலம் அடுத்த இரு மாதங்களில் முடிவதை தொடர்ந்து கவர்னர்களில் பெரும்பாலானவர்களை மாற்றவும், புதிதாக நியமனம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

குஜராத் மாநில கவர்னர் கோக்லியின் பதவி காலம் அடுத்த மாதம் (ஜூலை) 16-ந்தேதி முடிகிறது. அது போல நாகலாந்து கவர்னர் ஆச்சார்யாவின் பதவி காலம் ஜூலை 18-ந்தேதியும், உத்தரபிரதேசம் கவர்னர் ராம்நாயக் பதவி காலம் ஜூலை 21-ந்தேதியும் நிறைவு பெறுகிறது.

மேற்கு வங்க மாநில கவர்னர் திரிபாதி பதவி காலம் ஜூலை 23-ந்தேதியும், திரிபுரா மாநில கவர்னர் கப்தன் சிங் சோலங்கி பதவி காலம் ஜூலை 26-ந்தேதியும் முடிகிறது. இவர்களை தொடர்ந்து மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் பதவி காலம் ஆகஸ்டு 29-ந்தேதியும், கோவா மாநில கவர்னர் மிருதுளா சிங்காவின் பதவி காலம் ஆகஸ்டு 30-ந்தேதியும், கர்நாடக மாநில கவர்னர் வஜூபாய் பாலா பதவி காலம் ஆகஸ்டு 31-ந்தேதியுடன் முடிவடைகிறது.

இதற்கிடையே சத்தீஸ்கர் மாநில பொறுப்பை மத்திய பிரதேச மாநில கவர்னர் அனந்திபென் படேல் கூடுதலாக கவனித்து வருகிறார். அதுபோல ஆந்திரா, தெலுங்கானா இரு மாநில கவர்னர் பொறுப்பை நரசிம்மன் கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் கேரளா கவர்னர் சதாசிவத்தின் பதவி காலம் வருகிற செப்டம்பர் மாதம் நிறைவு பெற உள்ளது. அது போல ராஜஸ்தான் மாநில கவர்னர் கல்யாண் சிங் பதவி காலமும் செப்டம்பர் மாதம் முடிவடைகிறது.

மிசோரம் மாநில கவர்னர் ராஜசேகரன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த மாநில கவர்னர் பதவி காலியாக உள்ளது. எனவே இந்த 12 மாநிலங்களுக்கும் புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட வேண்டியது உள்ளது.

தற்போதைய கவர்னர்களில் நரசிம்மன் ஆந்திரா அல்லது தெலுங்கானாவின் கவர்னராக தொடர்ந்து நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மற்றவர்கள் அனைவரும் மாற்றப்படலாம் அல்லது வேறு பொறுப்புகளுக்கு அனுப்பப்படலாம்.

12 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களாக யார் யாரை தேர்வு செய்யலாம் என்று பிரதமர் மோடி தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார். மத்திய உள்துறை அமைச்சகமும் புதிய கவர்னர் பட்டியலை தயாரித்து கொடுத்துள்ளது.

பா.ஜனதா மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து கவர்னர் பதவியை பெற பா.ஜனதா மூத்த தலைவர்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த பா.ஜனதா மூத்த தலைவர்களில் யாராவது ஒருவருக்கு கவர்னர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
Tags:    

Similar News