செய்திகள்

மக்களவை துணை சபாநாயகர் பதவியை ஏற்க மறுத்த ஜெகன்மோகன் ரெட்டி தலைமை

Published On 2019-06-24 06:45 GMT   |   Update On 2019-06-24 06:45 GMT
மக்களவை துணை சபாநாயகர் பதவியை ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஏற்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமராவதி:

மக்களவை தேர்தலுடன் நடைப்பெற்ற ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 150க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிப் பெற்றது.

இதேபோல் மக்களவை தேர்தலிலும் மொத்தமுள்ள 25 இடங்களில் 22 இடங்களில் வெற்றிப் பெற்று வாகை சூடியது. இதன் மூலம் பாராளுமன்றத்தில் நான்காவது மிகப்பெரிய  பலம் வாய்ந்த கட்சியாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி  உயர்ந்தது.

இதனையடுத்து மக்களவையின் துணை சபாநாயகர் பதவியை ஆந்திர மாநிலத்தின் ஒய்எஸ்ஆர் கட்சிக்கு தர பாஜக முன்வந்ததாக தகவல்கள் வெளியானது. எனினும் இச்செய்தி அதிகாரப்பூர்வமாக பாஜக சார்பில் தெரிவிக்கப்படவில்லை.



இந்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் இச்செய்தி குறித்து கூறுகையில், ‘எங்கள் கட்சிக்கு எந்த பதவியும் தேவையில்லை. அப்படி பெற்றுக்கொண்டால் ஆட்சியில் பங்குப் பெற்றதாக பார்க்கப்படும்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் வரை எந்த பதவியும் வேண்டாம். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்காமல் இருப்பதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள்தான் காரணம்.

இரண்டாக பிரிக்கப்பட்ட மாநிலம் இது. ஆனால், இன்னும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை. எனவே காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளில் இருந்தும் விலகி இருக்க விரும்புகிறோம்’ என கூறியுள்ளார்.  

Tags:    

Similar News