செய்திகள்

குஜராத்தில் கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை

Published On 2019-06-24 00:26 GMT   |   Update On 2019-06-24 00:26 GMT
குஜராத்தில் கோதியார் மாதா என்ற அம்மன் கோவிலில் புகுந்த 6 அடி நீள முதலையை பொதுமக்கள் சந்தித்து வணங்கி வருகின்றனர்.
ஆமதாபாத்:

குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டம் பல்லா கிராமத்தில் கோதியார் மாதா என்ற அம்மன் கோவில் உள்ளது. இது பட்டேல் சமுதாயத்தினரின் குடும்ப கோவிலாகும். இந்த கோவிலுக்குள் நேற்று 6 அடி நீளமுள்ள முதலை ஒன்று நுழைந்தது. அது அம்மன் சிலைக்கு அருகில் சென்று படுத்துக்கொண்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் கோவிலுக்கு திரண்டுவந்தனர்.

அவர்கள் முதலைக்கு ஆரத்தி எடுத்தும், பூக்கள், குங்குமத்தை அதன் மீது தூவியும் வணங்கினர். வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கிடைத்து அவர்கள் முதலையை மீட்பதற்காக குழுவினருடன் அங்கு வந்தனர். ஆனால் கிராமத்தினர் முதலையை பிடித்துச்செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் மத இலக்கியத்தில் கோதியார் மாதா முதலை மீது பயணம் செய்ததாக சித்தரிக்கப்பட்டுள்ளது. எனவே அம்மன் வாகனத்தை பிடித்துச்செல்ல கூடாது என்று கூறி 2 மணி நேரம் தாமதித்தனர்.

பின்னர் வனத்துறை அதிகாரிகள் ஒருவழியாக அவர்களை சமாதானப்படுத்தி முதலையை பிடித்துச்சென்று அருகில் உள்ள ஒரு குளத்தில் விட்டனர். வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “மத உணர்வுகளை நாங்கள் புண்படுத்த விரும்பவில்லை. ஆனால் முதலை மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரின பட்டியலில் உள்ளது. இந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளில் ஏராளமான முதலைகள் உள்ளன. அவை உணவு தேடி 5 கிலோமீட்டர் வரை பயணம் செய்கின்றன. வருடத்துக்கு 30 முதலைகள் வரை மீட்கிறோம்” என்றார்.
Tags:    

Similar News