செய்திகள்

இந்தியர்கள் பற்றி பேச அமெரிக்காவுக்கு உரிமை இல்லை

Published On 2019-06-23 19:47 GMT   |   Update On 2019-06-23 19:47 GMT
இந்தியர்களை பற்றியோ, அரசியல் சட்டரீதியாக பாதுகாக்கப்பட்ட அவர்களது உரிமைகள் குறித்தோ கருத்து கூறுவதற்கு எந்த வெளிநாட்டு அரசுகளுக்கோ உரிமை இல்லை இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

சர்வதேச மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த 21-ந் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், “கடந்த ஆண்டு முழுவதும், இறைச்சிக்காக பசுக்கள் கொல்லப்படுவதாக எழுந்த வதந்தியின்பேரில், சிறுபான்மையினர் மீது இந்து குழுக்கள் நடத்திய கும்பல் தாக்குதல் தொடர்ந்தது” என்று கூறப்பட்டு இருந்தது.

இதற்கு பா.ஜனதா தரப்பில் ஏற்கனவே கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியதாவது:-

இந்தியா மதச்சார்பற்ற தன்மை கொண்ட, பன்முகத்தன்மை கொண்ட மாபெரும் ஜனநாயக நாடு. சிறுபான்மையினர் உள்பட அனைவரின் அடிப்படை உரிமைகளும் அரசியல் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டுள்ளது. மத சுதந்திரமும் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்தியா பெருமைப்படுகிறது. எனவே, இந்தியர்களை பற்றியோ, அரசியல் சட்டரீதியாக பாதுகாக்கப்பட்ட அவர்களது உரிமைகள் குறித்தோ கருத்து கூறுவதற்கு எந்த வெளிநாட்டு அமைப்புகளுக்கோ, வெளிநாட்டு அரசுகளுக்கோ உரிமை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக்கேல் பாம்பியோ, 3 நாள் பயணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) இந்தியா வரும்நிலையில், மத்திய அரசு இந்த கருத்தை தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News