செய்திகள்

சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வருவதை பாஜக ஏற்காது: எடியூரப்பா

Published On 2019-06-22 02:11 GMT   |   Update On 2019-06-22 02:11 GMT
சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வருவதை பா.ஜனதா ஏற்காது என்று கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறியுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் சட்டசபை தேர்தலை சந்திக்க எந்த கட்சியும் தயாராக இல்லை. இதை பா.ஜனதா ஏற்காது. ஆட்சியை நடத்த முடியாவிட்டால், கூட்டணி அரசு வெளியேற வேண்டும். பா.ஜனதா ஆட்சியை நடத்த தயாராக உள்ளது.

சட்டசபையில் பா.ஜனதா 105 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த அரசு கவிழ்ந்தால், பெரிய கட்சியாக இருக்கும் பா.ஜனதா, என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யும். ஆனால் சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெற வாய்ப்பு வழங்கவே மாட்டோம். முன்கூட்டியே தேர்தல் வேண்டாம் என்று காங்கிரசார் சொல்கிறார்கள்.

ஆனால் கூட்டணியில் உள்ள ஜனதா தளம் (எஸ்), முன்கூட்டியே தேர்தல் வரும் என்று சொல்கிறது. தேவேகவுடாவின் கருத்தை தவறாக புரிந்துகொள்ளப்பட்டு உள்ளதாக குமாரசாமி கூறுகிறார். மொத்தத்தில் இந்த கூட்டணி அரசு குழப்பத்தில் உள்ளது. இதனால் வளர்ச்சி பணிகள் முழுமையாக முடங்கிவிட்டன. சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தலை நடத்துவதால், மக்கள் மீது கூடுதல் சுமை திணிக்கப்படும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Tags:    

Similar News