செய்திகள்

மக்களவையில் புதிய முத்தலாக் தடை சட்ட மசோதா தாக்கல் - எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

Published On 2019-06-21 19:31 GMT   |   Update On 2019-06-21 19:31 GMT
பாராளுமன்ற மக்களவையில் நேற்று முத்தலாக் தடை சட்ட மசோதா புதிதாக தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான முந்தைய அரசு முத்தலாக் மூலம் விவாகரத்து பெறும் நடைமுறையை நீக்குவதற்காக மக்களவையில் சட்டமசோதா கொண்டுவந்து நிறைவேற்றியது. ஆனால் மாநிலங்களவையில் நிறைவேற்றாமல் நிலுவையில் இருந்தது. பின்னர் இதற்காக 2 முறை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இப்போது மோடி தலைமையிலான 2-வது ஆட்சியில் பாராளுமன்ற மக்களவை கூட்டத்தில் நேற்று முதல் சட்ட மசோதாவாக முத்தலாக் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

சபாநாயகர் ஓம் பிர்லா மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத்தை மசோதாவை அறிமுகம் செய்ய அழைத்த உடனே எதிர்க்கட்சிகள் இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களிடம் உங்கள் கருத்தை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறினார்.

இந்த மசோதாவை தாக்கல் செய்ய 186 உறுப்பினர்கள் ஆதரவும், 74 உறுப்பினர்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் ‘முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 2019’ என்ற முத்தலாக் தடை சட்டமசோதாவை தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பாலின சமத்துவத்துக்கும், நீதிக்கும் இந்த சட்ட மசோதா அவசியம். இது பெண்களுக்கு நீதி வழங்குவதற்கு தானே தவிர, இதில் மதம் பற்றிய கேள்வி எழவில்லை. இந்தியாவில் 543 முத்தலாக் தொடர்பான புகார்கள் வந்திருக்கின்றன. சுப்ரீம் கோர்ட்டு முத்தலாக் நடைமுறையை தடை செய்வது தொடர்பான தீர்ப்பு வழங்கிய பின்னர் மேலும் 200 புகார்கள் வந்துள்ளன.

இது பெண்களின் கண்ணியம் தொடர்பானது. எனவே நாம் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தின் வேலை சட்டத்தை நிறைவேற்றுவது தான். இந்த சட்டத்தில் தலையிடுவது பற்றி கோர்ட்டு முடிவு செய்யும்.

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பேசும்போது, “இது சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்களுக்கு எதிரானது. முத்தலாக் தடை மசோதாவை எதிர்க்கிறேன். இது ஒரு சமுதாயத்தை மட்டுமே, முஸ்லிம்களை மட்டுமே குறிக்கிறது. இத்தனைக்கும் மனைவிகள் கைவிடப்படுவது இங்கு மட்டுமே நடைபெறுவதில்லை. அனைத்து சமுதாயத்திலும் மனைவிகள் கைவிடப்படுவதை தடுக்க உலகளவில் பொருந்தக்கூடிய ஒரு சட்டம் தேவை” என்றார்.

அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எம்.பி. ஓவைசி பேசும்போது, “முஸ்லிம் பெண்கள் மீது அதிக பாசம் காட்டும் நீங்கள் (பா.ஜனதா), கேரளாவில் சபரிமலை கோவிலுக்கு செல்லும் இந்து பெண்களின் உரிமையை எதிர்ப்பது ஏன்? இந்த சட்டத்தின்படி குற்றம்சாட்டப்படும் முஸ்லிம் ஆண்களுக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்க வகைசெய்கிறது. ஆனால் இதே குற்றத்துக்கு முஸ்லிம் அல்லாத ஆண்களுக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை தான் வழங்கப்படுகிறது. எனவே முத்தலாக் தடை சட்டம் அரசியல்சாசன உரிமைகளை மீறுவதாக உள்ளது” என்றார்.

புரட்சிகர சோஷலிஸ்டு கட்சி உறுப்பினர் என்.கே.பிரேம்சந்திரனும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.
Tags:    

Similar News