செய்திகள்

நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

Published On 2019-06-21 10:50 GMT   |   Update On 2019-06-21 10:50 GMT
தலைநகர் டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 35வது கூட்டம் தொடங்கியது. நிதிமந்திரியாக பொறுப்பேற்றபின் முதல் முறையாக நிர்மலா சீதாராமன் இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.
புதுடெல்லி:

நாட்டின் மறைமுக வரிகளுக்கு மாற்றாக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற ஒற்றை வரி, 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி அமலுக்கு கொண்டுவரப்பட்டது. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளாக ஜி.எஸ்.டி. வரி சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
 
வரி விகிதங்களை மாற்றி அமைப்பது குறித்து முடிவெடுக்க மாநில நிதி மந்திரிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கவுன்சில் அவ்வப்போது கூடி முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. 

இதற்கிடையே, சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார் பிரதமர் மோடி. அவரது அமைச்சரவையில் நிதி மந்திரியாக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றுள்ளார்.



இந்நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 35-வது கூட்டம் இன்று மதியம் டெல்லி விக்யான் பவனில் தொடங்கியது. இந்த கூட்டத்தில், கவுன்சில் உறுப்பினர்களாக உள்ள மாநில நிதி மந்திரிகள் பங்கேற்று தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைத்தனர். தமிழகத்தின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றுள்ளார்.

ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கலை எளிமைப்படுத்துவது பற்றியும், சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொகையை திரும்ப அளிப்பது பற்றியும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. வாகனங்கள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றின் மீதான ஜிஎஸ்டி 18% ஆக குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News