செய்திகள்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் காவிரி ஆணையம் இருக்க வேண்டும்- அதிமுக வலியுறுத்தல்

Published On 2019-06-21 09:56 GMT   |   Update On 2019-06-21 09:56 GMT
காவிரி ஆணையத்தை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக எம்பி வலியுறுத்தினார்.
புதுடெல்லி:

மாநிலங்களவையில் இன்று நேரமில்லா நேரத்தில் அதிமுக எம்பி விஜிலா சத்யானந்த், காவிரி பிரச்சினையை எழுப்பினார். 

அவர் பேசுகையில், “காவிரி நதி தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்குகிறது. காவிரி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு பிரித்து வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இதற்காக, காவிரி மேலாண்மை ஆணையத்தின் நிர்வாகத்தை முற்றிலும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும். 

கோதாவரியையும் காவிரியையும் இணைக்கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். இதன்மூலம் 300 டிஎம்சி கோதாவரி தண்ணீரை பிற பகுதிகளுக்கு திருப்பி விட முடியும்” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா பேசும்போது, தலைநகரில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் உள்ள மொழிப் பிரிவை மூடுவதன் மூலம் தமிழ் மொழியை மத்திய அரசு சிறுமைப்படுத்துகிறது என குறிப்பிட்டார்.

பொது கட்டிடங்களில் தீ விபத்துக்களை தடுக்கும் வகையில், புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி சுப்பாராமி  ரெட்டி வேண்டுகோள் விடுத்தார். எந்த கட்டிடத்திலும் அடித்தளத்தில் சமையலறைக்கு அனுமதி வழங்கக்கூடாது, தீ பாதுகாப்பு அமைப்புகளை, முன்னறிவிப்பின்றி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Tags:    

Similar News