செய்திகள்

முத்தலாக் தடை சட்ட மசோதா மக்களவையில் மீண்டும் தாக்கல்

Published On 2019-06-21 08:00 GMT   |   Update On 2019-06-21 08:02 GMT
முத்தலாக் தடை சட்ட மசோதா மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய மந்திரி ரவிசங்கர்பிரசாத் மசோதாவை தாக்கல் செய்தார்.
புதுடெல்லி:

முஸ்லிம் பெண்களை அவர்களுடைய கணவன்மார்கள், ‘தலாக்’ என்று உடனுக்குடன் 3 தடவை கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் நோக்கத்தில், முத்தலாக் தடை சட்ட மசோதா, நரேந்திர மோடியின் முந்தைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்ட மசோதா என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவின் சில அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

குற்றச்சாட்டுக்கு உள்ளான கணவன்மார்களுக்கு ஜாமீன் கிடையாது என்ற ஷரத்து நீக்கப்பட்டது. இதையடுத்து, மக்களவையில் மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையில், பா.ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், மசோதா நிறைவேறாமல் நிலுவையில் இருந்தது. இதனால் முத்தலாக் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையே மக்களவையின் பதவிக்காலம் முடிவடைந்து, மக்களவை கலைக்கப்பட்டதால், முத்தலாக் தடை மசோதா காலாவதி ஆகிவிட்டது.

அதன்பின்னர் புதிய அரசு பொறுப்பேற்று, மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முத்தலாக் மசோதா இன்று மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை மத்திய சட்டத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.



அப்போது அவர் பேசுகையில், “முஸ்லிம் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். இது, பெண்களுக்கான நீதி மற்றும் அதிகாரமளித்தல் சம்பந்தப்பட்ட விஷயம். சட்டங்களை உருவாக்குவதற்காக மக்கள் நம்மை தேர்ந்து எடுத்துள்ளனர். சட்டங்களை உருவாக்குவது நமது பணி. முத்தலாக் நடைமுறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சட்டம் நீதி வழங்கும்” என்றார்.

முத்தலாக் தடுப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News