செய்திகள்

சென்னையில் அடுத்த ஆண்டு நிலத்தடி நீர் கிடைக்காது - நிதி ஆயோக் அமைப்பு தகவல்

Published On 2019-06-21 06:17 GMT   |   Update On 2019-06-21 06:17 GMT
சென்னை, பெங்களூர், டெல்லி, ஐதராபாத் ஆகிய 4 மெட்ரோ நகரங்கள் உள்ளிட்ட 21 நகரங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிட்டது. இந்த நகரங்களில் அடுத்த ஆண்டு முதல் நிலத்தடி நீரே இல்லாமல் போய் விடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக நிதி ஆயோக்  என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த அமைப்பு நாட்டில் தண்ணீர் நிலவரம் எப்படி இருக்கிறது என்பது பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதில் வரும் காலங்களில் பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை மோசமாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

தற்போது தண்ணீர் பிரச்சினையால் அல்லாடும் சென்னை நகரம் அடுத்ததாக மிக மோசமாக சூழ்நிலையை சந்திக்கப்போவதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் நிலத்தடி நீர் எந்த அளவிற்கு உள்ளது என்று நடத்தப்பட்ட ஆய்வில் பல நகரங்களில் முற்றிலும் தண்ணீர் வறண்டு விடும் நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

அதிலும் சென்னை, பெங்களூர், டெல்லி, ஐதராபாத் ஆகிய 4 மெட்ரோ நகரங்கள் உள்ளிட்ட 21 நகரங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிட்டது. இந்த நகரங்களில் அடுத்த ஆண்டு முதல் நிலத்தடி நீரே இல்லாமல் போய் விடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் சுமார் 10 கோடி மக்கள் போதிய தண்ணீர் கிடைக்காமல் பாதிப்புக்கு ஆளாவார்கள் என்று அந்த அமைப்பு கூறுகிறது.

மேலும் அடுத்த 10 ஆண்டுகளில் நிலத்தடி நீர் இன்னும் பல இடங்களிலும் கடும் சரிவை சந்திக்கும். இதனால் 2030-ம் ஆண்டு வாக்கில் நாட்டில் உள்ள 40 சதவீதம் மக்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காது என்று நிதி ஆயோக் கூறியிருக்கிறது.

மெட்ரோ நகரிலேயே சென்னையில் தான் தண்ணீரை சேமிப்பதற்கான சிறந்த வாய்ப்புகள் உள்ளன. அதாவது சென்னையில் அடையாறு, கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு ஆகிய 3 ஆறுகள் ஓடுகின்றன. இதுமட்டுமல்லாமல் 4 முக்கிய ஏரிகள், 6 வனப்பகுதிகளும் நகருக்குள்ளேயே அமைந்துள்ளன. பல இடங்களில் சதுப்பு நில பகுதியும் அமைந்திருக்கிறது.

இவ்வாறு நிலப்பரப்பு அமைந்துள்ள இடங்களில் நிலத்தடி நீர்வளம் சிறப்பாக இருக்கும். ஆனாலும் சென்னையை பொறுத்த வரையில் அவ்வாறு இல்லை. போதிய அளவிற்கு நீர்சேமிப்பு வசதிகளை செய்யாதது தான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக தேசிய நீர் அகாடமி முன்னாள் இயக்குனர் பேராசிரியர் மனோகர் கு‌ஷலானி கூறியிருப்பதாவது:-

சென்னை நகரை பொறுத்தவரை மழைநீர் சேகரிப்பு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த பல வழிகள் உள்ளன. ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் கொண்டுவரப்பட்டு அவை நல்ல பலனை கொடுத்தது. ஆனால் அதை தொடர்ந்து பின்பற்றாமல் விட்டதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டது.

சென்னை நகருக்கு வெளியில் இருந்து தண்ணீர் கொண்டுவருவது, கடல்நீரை குடிநீராக்குவது போன்றவை தற்காலிக நிவாரணமாகத் தான் இருக்கும். நிரந்தர தீர்வுக்கு மழைநீர் சேகரிப்பு தான் ஒரே வழி.

கடல்நீரை குடிநீராக்குவதற்கு அதிக அளவில் பணம் செலவழிக்க வேண்டியது இருக்கும். அதற்கு பதிலாக மழைநீர் சேகரிப்பை இன்னும் ஊக்கப்படுத்த வேண்டும். அவ்வாறு சேகரித்தால் நிச்சயம் நிலத்தடி நீர் மேல்நோக்கி வரும்.



மழைநீர் சேகரிப்பு திட்டங்களை உருவாக்குவதற்கு பெரிய அளவில் பணம் தேவைப்படாது. பொதுமக்கள் தாங்கிக் கொள்ளும் வகையில் தான் இந்த திட்டங்கள் இருக்கும். அரசும், பொதுமக்களும் ஒத்துழைத்து இதை செய்தால் நிச்சயம் நிலத்தடி நீரை உயர்த்த முடியும்.

கரும்பு போன்ற பயிர்கள் அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் அவற்றை பயிரிடாமல் மாற்றுப் பயிர்களை செய்யலாம். இன்று நிலத்தடி நீரை நாம் சேகரித்தால் தான் அடுத்த தலைமுறையான நமது சந்ததியினருக்கு நீர் கிடைக்கும்.

எவ்வளவுதான் பணம் இருந்தாலும் தண்ணீருக்கு பதில் பணத்தை குடிக்க முடியாது. எனவே அதற்கான திட்டங்கள் செயல்படுத்துவது நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News