செய்திகள்

ரூ.1,640 கோடி மோசடி: மன்சூர்கானின் நகைக்கடையில் எஸ்ஐடி போலீசார் அதிரடி சோதனை

Published On 2019-06-21 04:27 GMT   |   Update On 2019-06-21 04:27 GMT
ரூ.1,640 கோடி மோசடி வழக்கு தொடர்பாக மன்சூர்கானின் நகைக்கடையில் எஸ்.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது குவியல், குவியலாக வைர-தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் சிக்கின. அவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பெங்களூ :

பெங்களூரு சிவாஜி நகரில் நகைக்கடை நடத்தி வருபவர் மன்சூர்கான். இவர் தனது நிறுவனத்தில் முதலீடு செய்த பொதுமக்களிடம் இருந்து பலநூறு கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு தலைமறைவானார். இதுவரை மன்சூர்கானுக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ள புகார்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்தை தொட்டுள்ள நிலையில் அவர் ரூ.1,640 கோடி மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இந்த மோசடி குறித்து தொடர்ந்து பொதுமக்கள் புகார்கள் அளித்து வருகிறார்கள். இந்தநிலையில், மோசடி செய்த மன்சூர்கான் வெளிநாட்டுக்கு தப்பித்து சென்று இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த மோசடி குறித்து சிறப்பு விசாரணை குழு (எஸ்.ஐ.டி) விசாரணை நடத்தி வருகிறது. முதற்கட்டமாக அவருடைய நகைக்கடை மற்றும் தலைமை அலுவலகத்துடன் கூடிய நகைக்கடைக்கு ‘சீல்‘ வைத்த போலீசார் மன்சூர்கானை தேடிவருகிறார்கள். இதற்கிடையே, மன்சூர்கானின் வீடு, அவருடைய 3-வது மனைவியின் வீட்டில் அதிரடி சோதனை நடத்திய சிறப்பு விசாரணை குழு ரூ.33 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள், வெள்ளிப்பொருட்கள், முக்கிய ஆவணங்களை கைப்பற்றி கொண்டது.

அத்துடன், மன்சூர்கானுக்கு ‘ரெட்கார்னர்‘ நோட்டீசு வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம், சிறப்பு விசாரணை குழு கோரிக்கை வைத்துள்ளது.

இந்த நிலையில், நேற்று காலையில் சிவாஜிநகரில் உள்ள மன்சூர்கானின் தலைமை அலுவலகத்துடன் கூடிய நகைக்கடைக்கு சிறப்பு விசாரணை குழுவினர் சென்றனர். துணை போலீஸ் கமிஷனர் கிரீஷ் தலைமையிலான போலீசார் தலைமை அலுவலகத்துக்குள் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர். சோதனையானது நேற்று இரவு வரை தொடர்ந்து நடந்தது.

இந்த சோதனையின்போது, அலுவலகத்தில் குவியல், குவியலாக வைர நகைகள், தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து இரும்பு பெட்டிகளில் அடைத்து எடுத்துச் சென்றனர். தொடர்ந்து சோதனை நடந்ததால் பறிமுதல் செய்யப்பட்ட நகை, ஆவணங்களின் மதிப்பு உடனடியாக தெரியவில்லை.

நேற்று இரவு 9 மணி நிலவரப்படி மன்சூர்கான் நகைக் கடையில் 30 கிலோ தங்க நகைகள், 2,600 கேரட் வைரம், 450 கிலோ வெள்ளி பொருட்கள் சிக்கியதாக சிறப்பு விசாரணை குழுவினர் தெரிவித்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.20 கோடி இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சோதனையின்போது மன்சூர்கான் பொதுமக்களிடம் வசூலித்த பணத்தை ‘பிட்காயின்‘ முறையில் முதலீடு செய்ததற்கான சில ஆவணங்கள் கிடைத்துள்ளன. இதுபற்றியும் ‘பிட்காயின்‘ நிபுணர்களிடம் ஆலோசனை நடத்த சிறப்பு விசாரணை குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News