செய்திகள்

தமிழகத்துக்கு 1.72 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது - காவிரி ஒழுங்காற்றுக்குழு தலைவர் தகவல்

Published On 2019-06-21 03:03 GMT   |   Update On 2019-06-21 03:03 GMT
தமிழகத்துக்கு கடந்த 1-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 1.72 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடக அரசு திறந்து உள்ளதாக காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் கூறியுள்ளார்.
புதுடெல்லி:

காவிரி நீர் பங்கீட்டில் தொடர்புடைய தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து வைக்க, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு என்ற அமைப்புகளை மத்திய அரசு கடந்த ஆண்டு அமைத்தது.

இந்த 2 அமைப்புகளிலும் மேற்கண்ட 4 மாநிலங்களில் இருந்தும் தலா ஒரு அதிகாரி உறுப்பினராக உள்ளார். இந்த 2 அமைப்புகளும் அவ்வப்போது கூடி அணைகளின் நீர் இருப்பு விவரங்களையும், நீர் பங்கீட்டு அளவு விவரத்தையும் விவாதித்து வருகின்றன.

அந்தவகையில் கடந்த மாதம் 28-ந்தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், குறுவை சாகுபடிக்காக தமிழகத்துக்கு 9.19 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் கர்நாடக அரசு இன்னும் இந்த வரையறுக்கப்பட்ட அளவு தண்ணீரை வழங்கவில்லை.

இந்த தகவலை கடந்த 7-ந்தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் பதிவு செய்தனர். ஆனால் கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிப்பதற்கான அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கே உள்ளது என்பதால் கடந்த ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் அணைகளின் நீர் இருப்பு, நீர்வரத்து மற்றும் மழை பற்றிய புள்ளி விவரங்கள் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான விஷயங்கள் மற்றும் தரவுகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டம் மீண்டும் வருகிற 25-ந்தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 9-வது கூட்டம் நேற்று டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு தலைவர் நவீன்குமார் தலைமை தாங்கினார். தமிழக அரசு சார்பில் திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியம், உறுப்பினர் பட்டாபிராமன், உதவி செயற்பொறியாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திலும் காவிரி நீர் குறித்த புள்ளி விவரங்கள் மற்றும் தொழில் நுட்ப விவரங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. மழைநீரின் அளவு மற்றும் அணைகளில் தேக்கப்பட்டுள்ள நீரின் அளவு, நீர்வரத்து ஆகியவை குறித்தும் தரவுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந்த கூட்டத்துக்குப்பின் காவிரி ஒழுங்காற்றுக்குழு தலைவர் நவீன் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் கூட்டத்தில் காவிரி அணையின் நீர் இருப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. கடந்த 1-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தமிழகத்துக்கு கர்நாடகா அரசு பிலிகுண்டுலு பகுதியில் 1.72 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட்டுள்ளது. கர்நாடகாவில் அணை பகுதிகளில் மழையின் அளவு ஜூன் 1-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை வெகுவாக குறைந்துள்ளது என்று தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் இது போன்ற விஷயங்கள் மீது விரிவாக ஆலோசிக்கப்பட்டு இது குறித்த விரிவான அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையத்தின் பரிசீலனைக்கு தாக்கல் செய்வதாக அனைவராலும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. வருகிற 25-ந்தேதி நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் இந்த விஷயம் குறித்து முழுமையாகவும் விரிவாகவும் ஆலோசிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News