செய்திகள்

மேற்கு வங்காளத்தில் இரு தரப்பினரிடையே மோதல் - ஒருவர் சுட்டுக்கொலை

Published On 2019-06-20 23:32 GMT   |   Update On 2019-06-20 23:32 GMT
மேற்கு வங்காளத்தில் இரு பிரிவினரிடையே நடந்த மோதலில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அங்கு போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அங்கு நடந்த சில சட்டசபை இடைத்தேர்தல்களை தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தொண்டர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இதில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன. இந்த அரசியல் வன்முறை மற்றும் உயிரிழப்புகள் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தலைவர்களுக்கு இடையே வார்த்தை மோதல் நீடித்து வருகிறது.

இந்தநிலையில் வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட பட்பாரா பகுதியில் நேற்று மீண்டும் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் வன்முறையில் ஈடுபட்டனர்.

இந்த பயங்கர சம்பவத்தில் ராம்பாபு ஷா என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் 3 பேர் படுகாயமடைந்து உள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் போலீஸ் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பதற்றத்தை தணிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த கலவரத்தால் அந்த பகுதியில் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன.

இதற்கிடையே பட்பாரா பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்ததாக பா.ஜனதா தலைவர் கைலாஷ் விஜய் வர்கியா கூறியுள்ளார். மாநிலத்தில் ஆளும் மம்தா பானர்ஜி அரசே இந்த வன்முறை சம்பவங்களுக்கு காரணம் என அவர் தெரிவித்தார். இதைப்போல பா.ஜனதாவின் பரக்பூர் தொகுதி எம்.பி.யான அர்ஜூன் சிங்கும், போலீசார் துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியானதாக தெரிவித்தார்.

ஆனால் இந்த தகவலை போலீசார் மறுத்து உள்ளனர்.

தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வரும் பட்பாரா, காக்கிநாரா பகுதிகளில் பா.ஜனதாவின் உண்மை கண்டறியும் குழுவினர் ஆய்வு நடத்தி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என விஜய் வர்கியா கூறியுள்ளார்.
Tags:    

Similar News