செய்திகள்

தமிழகத்தில் இருந்து மன்மோகன்சிங் எம்.பி. ஆகிறார் - திமுகவிடம் ஆதரவு கேட்கும் காங்கிரஸ்

Published On 2019-06-20 08:37 GMT   |   Update On 2019-06-20 08:37 GMT
தமிழகத்தில் இருந்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் டெல்லி மேல் சபை எம்.பி. ஆக ஆதரவு தருமாறு காங்கிரஸ் தலைவர்கள் தி.மு.க.வுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுடெல்லி:

பாராளுமன்ற மேல்சபையில் எம்.பி.க்களாக இருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களில் 6 பேரின் பதவிக்காலம் நிறைவு பெறுகிறது.

இதையடுத்து 6 புதிய எம்.பி.க்களை தேர்ந்து எடுக்க அடுத்த மாதம் (ஜூலை) தேர்தல் நடைபெற உள்ளது.

பாராளுமன்ற மேல் சபை எம்.பி.க்களை தமிழக எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டு தேர்ந்து எடுப்பார்கள். அந்த வகையில் சட்டசபையில் உள்ள கட்சி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் அ.தி.மு.க. சார்பில் 3 எம்.பி.க்களையும், தி.மு.க. சார்பில் 3 எம்.பி.க்களையும் தேர்ந்து எடுக்க முடியும்.

அ.தி.மு.க. தரப்பில் பா.ம.க.வுக்கு ஒரு எம்.பி. இடமும், தி.மு.க. தரப்பில் வைகோவுக்கு ஒரு எம்.பி. இடமும் விட்டு கொடுப்பதற்கு ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே மேல்சபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் 2 எம்.பி.க்களும், தி.மு.க. சார்பில் 2 எம்.பி.க்களும் மட்டுமே தேர்ந்து எடுக்கப்பட முடியும்.

தமிழகத்தில் இருந்து ஒரு மேல்சபை எம்.பி.யை தேர்வு செய்ய 39 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்பதால் அ.தி.மு.க, தி.மு.க. சார்பில் மட்டுமே எம்.பி.க்களை தேர்ந்து எடுக்க முடியும்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து டெல்லி மேல் சபைக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை தேர்ந்து எடுக்க உதவும்படி தி.மு.க.வின் உதவியை காங்கிரஸ் நாடி உள்ளது. தமிழக சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் மட்டுமே உள்ளனர்.



எனவே மன்மோகன் சிங்கை தேர்வு செய்ய தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அந்த ஆதரவை தருமாறு காங்கிரஸ் தலைவர்கள் தி.மு.க.வுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்மோகன்சிங் அடுத்தடுத்து அசாம் மாநிலத்தில் இருந்தே மேல்சபைக்கு தேர்வாகி வந்தார். கடந்த 15-ந்தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிந்து விட்டது. மீண்டும் அசாமில் இருந்து அவர் தேர்வாகும் வகையில் அங்கு காங்கிரசுக்கு எம்.எல்.ஏ.க்கள் பலம் இல்லை.

காங்கிரசுக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ள மாநிலங்களில் இப்போது மேல்சபை எம்.பி. இடம் எதுவும் காலியாகவில்லை. இதையடுத்தே தமிழ்நாட்டில் இருந்து மன்மோகனை மேல் சபைக்கு கொண்டுவர தி.மு.க.வின் உதவியை காங்கிரசார் நாடியுள்ளனர். காங்கிரசின் கோரிக்கையை மு.க.ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார்.

விரைவில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இடைதேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் தொகுதியான நாங்குநேரியை தி.மு.க. கேட்டு வருகிறது. அதற்கு பதில் மன்மோகன் சிங்குக்கு மேல் சபை எம்.பி. பதவியை கொடுக்க ஆலோசனை நடந்து வருகிறது.

மன்மோகன் சிங்குக்கு ஒரு எம்.பி. இடத்தை கொடுத்து விட்டால் தி.மு.க. சார்பில் ஒரே ஒரு எம்.பி.யைத்தான் தேர்ந்து எடுக்க முடியும். தி.மு.க. இளைஞர் அணி தலைவர் பதவியில் இருந்து விலகி உள்ள வெள்ளக்கோயில் சாமிநாதனுக்கு அந்த இடம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News