செய்திகள்

சபரிமலை விவகாரத்தில் புதிய சட்டம் கொண்டுவர கேரள அரசு கோரிக்கை

Published On 2019-06-20 02:14 GMT   |   Update On 2019-06-20 02:14 GMT
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையை பாதுகாக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசுக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
திருவனந்தபுரம் :

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பை அமல்படுத்த கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அரசு முடிவு செய்தது.

அதற்கு பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், கோவில் வளாகத்தில் கைகலப்பு, தள்ளுமுள்ளு சம்பவங்கள் அரங்கேறின. அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்வதற்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் நடந்தன.

இதற்கிடையே, சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக கேரள மாநிலம் கொல்லம் தொகுதி எம்.பி. என்.கே.பிரேம சந்திரன் நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா கொண்டு வந்துள்ளார். இம்மசோதா, இந்த வாரம் விவாதத்துக்கு வருகிறது.

இந்த சூழ்நிலையில், பக்தர்களின் நம்பிக்கையை பாதுகாக்க சட்டம் கொண்டு வருமாறு மத்திய அரசுக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.



இதுகுறித்து கேரள தேவஸ்தான மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சபரிமலை விவகாரம், தனிநபர் மசோதாவாக மத்திய அரசின் முன்பு இருக்கிறது. தனிநபர் மசோதாக்களின் கதி என்னவாகும் என்று எல்லோருக்கும் தெரியும்.

அத்தகைய சூழ்நிலை எழாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, சபரிமலைக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையை பாதுகாக்க மத்திய அரசு ஒரு மசோதா கொண்டுவர வேண்டும். பா.ஜனதாவுக்கு மக்களவையில் பெரும்பான்மை இருப்பதால், இந்த மசோதாவை கொண்டுவர வேண்டும். மாநில பா.ஜனதா தலைமையும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News