செய்திகள்

ஒரு நாடு, ஒரே தேர்தல் திட்டம் - பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் முயற்சி - காங்கிரஸ் கருத்து

Published On 2019-06-20 00:21 GMT   |   Update On 2019-06-20 00:21 GMT
உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களை திருப்பவே பிரதமர் மோடியும், மத்திய அரசும், ஒரு நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை கையில் எடுத்துள்ளார்கள் என காங். செய்தி தொடர்பாளர் சவுராப் கோகாய் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும், ‘ஒரு நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.

இந்த திட்டம் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சவுராப் கோகாய் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களை திருப்பவே பிரதமர் மோடியும், மத்திய அரசும், ஒரு நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை கையில் எடுத்துள்ளார்கள். இந்த விவகாரத்தில் பிரதமர் தீவிரமாக இருந்தால், அவர் ஒரு அரசியல் சாசன திருத்தத்தை கொண்டு வர வேண்டும்’ என்று தெரிவித்தார்.

ஒருபுறம், ஒரே தேர்தல் குறித்து பேசி வரும் மத்திய அரசு, மறுபுறம் குஜராத்தில் 2 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலை 2 நாட்களாக நடத்துவதாக குற்றம் சாட்டிய கோகாய், அதைப்போலவே இமாசல பிரதேசம், குஜராத் சட்டசபைகளுக்கு 2 வெவ்வேறு நாட்களில் தேர்தல் நடத்துகிறது என்றும் கூறினார்.
Tags:    

Similar News