செய்திகள்

வரிசையில் நிற்க சொன்னதால் ரெயில்வே போலீஸ் அதிகாரியை தாக்கிய ஆசாமிகள்

Published On 2019-06-19 06:51 GMT   |   Update On 2019-06-19 06:51 GMT
உத்தர பிரதேச மாநிலம் தியோரியாவில் டிக்கெட் கவுண்டரில் வரிசையில் நிற்கும்படி கூறிய ரெயில்வே போலீஸ் அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தியோரியா:

உத்தர பிரதேச மாநிலம் தியோரியா ரெயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையத்தில் நேற்று ரெயில்வே போலீஸ் தலைமை காவலர் ஒருவர் பணியில் ஈடுபட்டிருந்தார். டிக்கெட் பதிவு செய்வதற்காக வரிசையில் காத்திருக்கும் பயணிகளை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார்.

அப்போது, 2 வாலிபர்கள் வரிசையில் வராமல் குறுக்கே வந்து, மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர். ஏற்கனவே இருந்த வரிசையை இரண்டாக பிரித்து, மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தவும் முயன்றனர். இதனைக் கவனித்த தலைமைக் காவலர், ஒழுங்காக வரிசையில் நின்று டிக்கெட் வாங்கும்படி அவர்களை எச்சரித்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


அப்போது, தலைமைக் காவலரை அந்த வாலிபர்கள் தகாத வார்த்தைகளால் பேசியதுடன், சரமாரியாக தாக்கினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. கூடியிருந்த பொதுமக்கள் இதனை தடுக்க முன்வரவில்லை. சிறிது நேரத்தில் மற்ற போலீஸ்காரர்கள் விரைந்து வந்து, நிலைமையை கட்டுப்படுத்தினர். தாக்குதல் நடத்திய 2 வாலிபர்களையும் கைது செய்தனர். தலைமைக் காவலர் தாக்கப்படும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags:    

Similar News