செய்திகள்
கோப்புப்படம்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு பிறகு பலத்த மழைக்கு வாய்ப்பு

Published On 2019-06-19 05:26 GMT   |   Update On 2019-06-19 05:26 GMT
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பிறகு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

கேரளாவில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக 8-ந்தேதி தொடங்கியது. தென்மேற்கு பருவமழை காலத்தில் இந்தியா முழுமைக்கும் 43 சதவிகித அளவிற்கு மழை பொழிவு இருக்கும்.

இந்த ஆண்டு தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை அடுத்தடுத்த நாட்களில் அதன் தீவிரத்தை இழந்தது.

தென்மேற்கு பருவமழையின் தீவிரம் குறைந்ததற்கு அரபிக்கடலில் உருவான வாயு புயல் காரணம் என கூறப்பட்டது. கேரளாவின் லட்சத்தீவு அருகே உருவான வாயு புயல் குஜராத் கடல் பகுதி நோக்கி நகர்ந்தது.

அப்போது தென்மேற்கு பருவமழைக்கான ஈரப்பதத்தையும் உறிஞ்சி சென்றது. இதனால் தென்மேற்கு பருவமழை குறைந்து போனதோடு வடகேரளம், தெற்கு கர்நாடகா பகுதிகளில் மழையும் நின்று போனது.

தென்மேற்கு பருவமழை கடந்த 2007-ம் ஆண்டு இதுபோல தாமதமானது.12 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது அதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி சிவானந்தபாய் கூறியதாவது:-

இந்தியாவில் தாமதமாகி வரும் தென்மேற்கு பருவமழை 2 அல்லது 3 நாட்களில் கொங்கன் கடற்கரையில் பெய்யுமென்று எதிர்பார்க்கிறோம். மராட்டிய மாநிலத்தில் வருகிற 25-ந்தேதிக்கு மேல் தென்மேற்கு பருவமழை தீவிரமாகும். மற்ற பகுதிகளில் அடுத்த 15 நாட்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

2007-ம் ஆண்டுதான் இதே நிலை ஏற்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதும் அந்த நிலை உருவாகி உள்ளது. வழக்கமாக இந்த காலக்கட்டத்தில் 43 சதவிகித அளவிற்கு மழை பெய்திருக்கும். இந்த ஆண்டு 38 சதவிகித அளவுக்கே மழை பெய்திருக்கிறது.


தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பிறகு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த மழை தெற்கு கர்நாடகா, கோவா, ஆந்திரா, சிக்கிம், ஒடிசா ஆகிய பகுதிகளில் பெய்யும்.

25-ந்தேதிக்கு பிறகு தென் இந்தியா, மராட்டியம் மற்றும் மத்திய இந்திய பகுதிகளில் மழை பெய்யும். ஜூன் மாத இறுதி முதல் ஜூலை மாத முதல் வாரம் வரை மத்திய இந்தியா முழுமையும் மழைக்கு வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News