செய்திகள்

ஜிந்தால் நிறுவன நில விவகாரத்தில் அரசியல் செய்யவில்லை: எடியூரப்பா

Published On 2019-06-18 02:35 GMT   |   Update On 2019-06-18 02:35 GMT
ஜிந்தால் நிறுவனத்துக்கு நிலம் வழங்கும் விவகாரத்தில் அரசியல் செய்யவில்லை என்று கர்நாடக மாநில பா.ஜனதா தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா கூறியுள்ளார்.
மைசூரு :

கர்நாடக மாநில பா.ஜனதா தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மைசூருவுக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஜிந்தால் நிறுவனத்துக்கு மாநில அரசு நிலம் வழங்க முடிவு செய்துள்ளது. இதனை எதிர்த்து நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். நாங்கள் தர்ணா போராட்டம் நடத்துவது ஒரு வாரத்திற்கு முன்பே முதல்-மந்திரி குமாரசாமிக்கு தெரிந்திருந்தது. அப்போதே எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருக்கலாம்.

ஆனால் நாங்கள் இரவு-பகலாக தர்ணா இருந்துவிட்டு ஊர்வலம் செல்லும் நேரத்தில் எங்களை தடுத்து நிறுத்தி முதல்-மந்திரி பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதாக கூறுகிறார்கள். அப்போது முதல்-மந்திரியை சந்திக்க மறுத்ததால், எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா பேச்சுவார்த்தைக்கு வரவில்லை, ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று குமாரசாமி குற்றம்சாட்டுகிறார்.

ஜிந்தால் நிறுவன நில விவகாரத்தில் நான் அரசியல் செய்யவில்லை. அரசியல் செய்யும் எண்ணமும் எனக்கு இல்லை. மக்களின் நலன் தான் எனக்கு முக்கியம்.

முதல்-மந்திரி குமாரசாமி கிராமங்களில் தங்கும் நாடகத்தை நிறுத்த வேண்டும். மாநிலத்தில் 80 சதவீத கிராமங்களில் குடிநீர் இல்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் முதல்-மந்திரி கிராமங்களில் தங்குவதை கைவிட்டு, வறட்சி பாதித்த பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

கிராமங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அதிகாரிகளை கண்காணித்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க குமாரசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News