செய்திகள்

போராடும் டாக்டர்களின் நிபந்தனையை ஏற்றார் மம்தா- பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

Published On 2019-06-17 07:42 GMT   |   Update On 2019-06-17 07:42 GMT
போராடும் டாக்டர்களின் நிபந்தனைகளை ஏற்ற மம்தா, மருத்துவ மாணவ பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கடந்த 10-ந் தேதி உயிரிழந்ததால், அவரது உறவினர்கள் அங்கு பணியாற்றி வரும் 2 பயிற்சி டாக்டர்களை தாக்கினர். இதை கண்டித்து 11-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டாக்டர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்களுக்கு ஆதரவாகவும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு முழுவதும் கடந்த 14-ந் தேதி முதல் 3 நாட்கள் போராட்டங்கள் நடந்தன. இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் 17-ந் தேதி (இன்று) வேலைநிறுத்தம் நடத்தவும் இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.



அதன்படி இன்று டாக்டர்களின் வேலைநிறுத்தம் நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதன்மூலம் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட அத்தியாவசியம் இல்லாத பணிகளை டாக்டர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் நாடு முழுவதும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆனால் அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சைகள் வழக்கம் போல நடைபெறுகின்றன.

இதற்கிடையே மேற்கு வங்காளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்களை தலைமை செயலகத்துக்கு பேச்சுவார்த்தைக்கு வரும்படி என முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் மம்தாவின் அழைப்பை நிராகரித்த அவர்கள், மூடிய அறைக்குள் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டோம் எனவும், பேச்சுவார்த்தை வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும், ஊடகங்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தனர்.



இந்நிலையில், போராடும் டாக்டர்களின் நிபந்தனைகளை ஏற்ற மம்தா, மருத்துவ மாணவ பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் தெரிவித்துள்ளார்.

போராடும் டாக்டர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் கடிதம் எழுதியுள்ளது. அதில், இன்று மாலை 3 மணிக்கு நபன்னாவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு மருத்துவ கல்லூரிகளிலும் இருந்து 2 மாணவ பிரதிநிதிகள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பேச்சுவார்த்தை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News