செய்திகள்

ஊடகங்கள் முன்னிலையில் தான் பேச்சுவார்த்தை- போராடும் டாக்டர்கள் மம்தாவிற்கு நிபந்தனை

Published On 2019-06-16 15:25 GMT   |   Update On 2019-06-16 15:25 GMT
மேற்கு வங்காளம் மாநிலத்தில் 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்கள் முதல் மந்திரி மம்தா பானர்ஜியுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த நிபந்தனை விதித்துள்ளனர்.
கொல்கத்தா: 

மேற்கு வங்காளம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் சமீபத்தில் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 பயிற்சி டாக்டர்களை கொடூரமாக தாக்கினர்.

இதைக் கண்டித்து அரசு டாக்டர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். மம்தாவின் இந்த நடவடிக்கை போராட்டக்காரர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
மேற்கு வங்காளத்தில் போராட்டம் நடத்தி வரும் டாக்டர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை டாக்டர்களும் போராட்டத்தில் குதித்தனர். அரசு மருத்துவமனைகளில் உள்ள சுமார் 300 டாக்டர்கள் தங்கள் பணியை ராஜினாமா செய்துள்ளனர்.

சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்த அரசின் கோரிக்கையை டாக்டர்கள் நிராகரித்து விட்டனர்.

டாக்டர்கள் போராட்டம் இன்று 6-வது நாளை எட்டியுள்ளது. இதனிடையே நாளை காலை முதல் 24 மணிநேரம் நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அனைத்திந்திய டாக்டர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.



இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் பயிற்சி டாக்டர்கள் முதல் மந்திரி மம்தா பானர்ஜியுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த நிபந்தனை விதித்துள்ளனர். 

பேச்சுவார்த்தைக்கு நடத்த முதல்வர் மம்தா எங்கு அழைத்தாலும் செல்ல தயாராக இருக்கிறோம், ஆனால் பேச்சுவார்த்தை வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும். ஊடகங்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என போராடும் பயிற்சி டாக்டர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.
Tags:    

Similar News