செய்திகள்

ராமர் கோவில் கட்ட அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் - அயோத்தியில் உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

Published On 2019-06-16 07:55 GMT   |   Update On 2019-06-16 07:55 GMT
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என பிரதமர் மோடிக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.
லக்னோ:

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று 2-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் அபார வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 303 இடங்களில் வென்றது. கூட்டணி கட்சியான சிவசேனா 18 இடங்களில் வெற்றி பெற்றது. 

இதற்கிடையே, தேர்தலில் வெற்றி பெற்ற சிவசேனா கட்சி எம்.பி.க்களுடன் அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே அயோத்திக்கு செல்வார்  என தெரிவிக்கப்பட்டு இருந்தது.



இந்நிலையில், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, தனது மகன் ஆதித்யா மற்றும் கட்சி எம்பிக்களுடன் அயோத்திக்கு இன்று சென்றார். அவர் சர்ச்சைக்குரிய இடத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பந்தலில் வைத்துள்ள ராமர் சிலையை வழிபட்டார்.

அதன்பின், உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி துணிவுமிக்கவர். ராமர் கோவில் விவகாரத்தில் மத்திய அரசு துணிச்சலான முடிவை எடுக்க வேண்டும். எனவே, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினார்.
Tags:    

Similar News