செய்திகள்

மேற்கு வங்காளத்தில் அரசியல் வன்முறை, டாக்டர்கள் ஸ்டிரைக்- விளக்கம் கேட்கும் மத்திய அரசு

Published On 2019-06-15 10:31 GMT   |   Update On 2019-06-15 10:31 GMT
அரசியல் வன்முறை மற்றும் டாக்டர்கள் ஸ்டிரைக் குறித்து தனித்தனியே விளக்கம் அளிக்குமாறு மேற்கு வங்காளம் அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி:

மேற்கு வங்காளம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் கடந்த 11-ம் தேதி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 பயிற்சி டாக்டர்களை கொடூரமாக தாக்கினர்.

இதைக் கண்டித்து கடந்த 12-ம் தேதி முதல் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். மம்தாவின் இந்த நடவடிக்கை போராட்டக்காரர்களுக்கு ஆத்திரத்தை கொடுத்துள்ளது.

இதையடுத்து, அங்குள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் 300-க்கும் மேற்பட்ட மூத்த டாக்டர்கள் தங்கள் பணியை ராஜினாமா செய்தனர்.



மம்தா பானர்ஜி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு, தங்களது 6 கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என டாக்டர்கள் அறிவித்து உள்ளனர்.

இதேபோல் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக தொண்டர்கள் இடையே மோதல்கள் வலுத்துவருகிறது. இதன் எதிரொலியாக பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாஜக பெண் பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மேற்கு வங்காளத்தில் கடந்த 4 ஆண்டுகளில் அரசியல் வன்முறைகள் அதிகரித்துள்ளன.  இதில் கடந்த 4 ஆண்டுகளில் 160 அரசியல் பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் தொடர்ந்துவரும் அரசியல் வன்முறை மற்றும் டாக்டர்கள் ஸ்டிரைக் குறித்து தனித்தனியே விளக்கம் அளிக்குமாறு அம்மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இன்று கடிதம் அனுப்பியுள்ளது.
Tags:    

Similar News