செய்திகள்

மேற்கு வங்காளத்தில் வாழ்பவர்கள் வங்காளம் மொழியில் பேச வேண்டும் - மம்தா வலியுறுத்தல்

Published On 2019-06-14 11:04 GMT   |   Update On 2019-06-14 11:04 GMT
வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால்தான் போராட்டங்கள் நடப்பதாக குற்றம்சாட்டியுள்ள மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் வாழ்பவர்கள் வங்காளம் மொழியில் பேச வேண்டும் என வலியுறுத்தினார்.
கொல்கத்தா:

கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கடந்த திங்களன்று நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் எனக்கூறி, அவரது உறவினர்கள், மருத்துவர்களை சரமாரியாகத் தாக்கினர். இதையடுத்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி கடந்த பத்தாம் தேதியில் இருந்து அரசு பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பயிற்சி மருத்துவர்களுக்கு ஆதரவாக அரசு மருத்துவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டதால், அங்கு அரசு மருத்துவமனைகளில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், மும்பை, கேரளா, ராஜஸ்தான், பெங்களூரு, சத்தீஸ்கர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதி மருத்துவர்கள் மேற்கு வங்காள மருத்துவர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி உள்ளனர். இதனால் அனைத்து மாநிலங்களிலும் சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக இன்று பேசிய மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால்தான் இங்கு தற்போது டாக்டர்கள் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

'வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து இங்கு பாராளுமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெற்று விட்டதால் அவர்கள் வங்காள மக்கள் மீதும் சிறுபான்மையினர் மீதும் தாக்குதல் நடத்துவதை நாங்கள் சகித்துக்கொள்ள முடியாது.

வெளி மாநிலங்களில் இருந்து இங்கு வந்து மோட்டார் சைக்கிள்களில் ஊரைச் சுற்றும் ரவுடிகள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். மேற்கு வங்காளத்தில் வாழ்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வங்காளம் மொழியில் பேச வேண்டும். வங்காளம் மொழியை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்’ எனவும் மம்தா வலியுறுத்தினார். 
Tags:    

Similar News