செய்திகள்

டாக்டர்கள் போராட்டம் நீடிப்பு - டெல்லி, மும்பை, கேரளாவில் மருத்துவ சேவை பாதிப்பு

Published On 2019-06-14 07:05 GMT   |   Update On 2019-06-14 07:30 GMT
மேற்கு வங்காளத்தில் நடந்துவரும் டாக்டர்கள் போராட்டத்துக்கு டெல்லி, மும்பை, கேரளா மாநில டாக்டர்கள் ஆதரவளித்து வருவதால் மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

மேற்கு வங்காளம் மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த திங்களன்று நோயாளியின் உறவினர் ஒருவர் பயிற்சி மருத்துவர் ஒருவரை தாக்கினார். இதையடுத்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி திங்கள் முதல் அரசு பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பயிற்சி மருத்துவர்களுக்கு ஆதரவாக அரசு மருத்துவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டதால், அங்கு அரசு மருத்துவமனைகளில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனைக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேற்று  சென்றபோது, தங்களுக்கு நீதி வேண்டும் எனக்கூறி டாக்டர்கள் கோஷம் எழுப்பியதால் அவர் கோபமடைந்தார்.



இதையடுத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் 4 மணி நேரத்திற்குள் பணிக்கு திரும்ப வேண்டும். அவ்வாறு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்தார். 

மம்தாவின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத  பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து 4வது நாளாக போராட்டத்தை நீட்டித்து வருகின்றனர். இதனால் சுகாதார சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், மும்பை, கேரளா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதி மருத்துவர்கள் மேற்கு வங்காள மருத்துவர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி உள்ளனர். இதனால் அனைத்து மாநிலங்களிலும் சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News