செய்திகள்

2022-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பிரியங்காவை முதல்-மந்திரி வேட்பாளர் ஆக்க தொண்டர்கள் கோரிக்கை

Published On 2019-06-13 22:49 GMT   |   Update On 2019-06-13 22:49 GMT
2022-ம் ஆண்டு நடக்கும் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பிரியங்காவை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரேபரேலி:

பாராளுமன்ற தேர்தலையொட்டி, சோனியா காந்தியின் மகள் பிரியங்கா, நேரடி அரசியலில் களம் இறக்கப்பட்டார். காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். உத்தரபிரதேசத்தில் அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இருப்பினும், சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூட அமேதியில் தோல்வி அடைந்தார்.

இந்நிலையில், ரேபரேலியில் காங்கிரஸ் தலைவர்களுக்கும், ஊழியர்களுக்கும் சோனியா காந்தி விருந்து அளித்தார். அவர்களுடன் ஆலோசனை கூட்டமும் நடத்தினார். அதில், பிரியங்கா உள்ளிட்ட மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், காங்கிரஸ் ஊழியர்கள் ஏராளமான யோசனைகளை தெரிவித்தனர். அவற்றில், 2022-ம் ஆண்டு நடக்கும் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பிரியங்காவை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதும் அடங்கும். அப்படி அறிவித்தால், காங்கிரஸ் மீண்டு எழும் என்று வாரணாசி முன்னாள் எம்.பி ராஜேஷ் குமார் மிஸ்ரா தெரிவித்தார். அதற்கு பிரியங்கா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

உத்தரபிரதேசத்தில் 12 சட்டசபை தொகுதிகளுக்கு சில மாதங்களில் இடைத்தேர்தல் நடக்கிறது. அதில், எந்த கட்சியுடனும் கூட்டணி சேராமல், முழு பலத்துடன் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும் ஊழியர்கள் யோசனை கூறினர்.

வேட்பாளர்களை நன்கு பரிசீலித்து, விரைவாக அறிவிக்க வேண்டும் என்றும், அப்படி அறிவித்தால்தான், கீழ்மட்டம்வரை பிரசாரம் செய்ய போதிய கால அவகாசம் கிடைக்கும் என்றும் அவர்கள் கூறினர்.

ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், வேட்பாளராக நிறுத்த வாய்ப்புள்ள தலா 3 பேரின் பெயர்களை வெளியிடுமாறும் வலியுறுத்தினர். பலவீனமான அமைப்பு கட்டமைப்புதான், நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு காரணம் என்றும் அவர்கள் கூறினர்.

இந்த கூட்டத்தில் பிரியங்கா பேசும்போது, கட்சி ஊழியர்கள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றாததால்தான், தேர்தலில் தோல்வி ஏற்பட்டது என்று குற்றம் சாட்டினார்.

12 தொகுதி இடைத்தேர்தலுக்கு கீழ்மட்ட அளவில் இப்போதே ஆயத்த பணிகளை தொடங்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். மேலும், அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோல்விக்கான காரணங்களை ஆராய அமைக்கப்பட்ட 2 பேர் குழுவின் அறிக்கை பிரியங்காவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதில், சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களின் ஒத்துழைப்பு இல்லாததுதான் தோல்விக்கு காரணம் என்று அங்குள்ள காங்கிரஸ் ஊழியர்கள் கூறியதாக குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News