செய்திகள்

2030-க்குள் இந்தியாவுக்கு தனி விண்வெளி நிலையம்- இஸ்ரோ தலைவர் சிவன்

Published On 2019-06-13 10:30 GMT   |   Update On 2019-06-13 10:30 GMT
2030-ம் ஆண்டுக்குள் விண்வெளியில், இந்தியாவுக்கு தனி விண்வெளி நிலையம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டா:

இந்தியா கடந்த 2008-ம் ஆண்டு நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-1 என்ற விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பை சுற்றி வந்து ஆய்வு செய்தது. அப்போது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்து படம் எடுத்து அனுப்பியது. இதனால் ரூ.800 கோடி செலவில் அனுப்பப்பட்ட சந்திராயன்-1 திட்டம் வெற்றி பெற்றது.

இதையடுத்து நிலவை மேலும் ஆராய்ச்சி செய்ய சந்திராயன்-2 விண்கலம் திட்டத்துக்கு இஸ்ரோ முடிவு செய்தது. பல நூறு கோடி ரூபாய் செலவில் சந்திராயன்-2 விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலத்தை கடந்த ஆண்டே நிலவுக்கு அனுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சி செய்தனர்.

ஆனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட்-6ஏ செயற்கைகோளின் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக சந்திராயன்-2 விண்கலத்தை ஏவும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே சந்திராயன்- 2 விண்கலம் ஜூலை மாதம் 15ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.



இந்நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், "2030-க்குள் விண்வெளியில் இந்தியாவுக்கு தனி விண்வெளி நிலையம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் சுகன்யான் திட்டம் 2022 ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவேற்றப்படும். சுகன்யான் திட்டத்திற்காக அடுத்த 6 மாதத்தில் 2 முதல் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். சுகன்யான் திட்டக்குழுவுக்கு அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்படும்" என தெரிவித்தார்.
Tags:    

Similar News