செய்திகள்

நெருங்கும் வாயு புயல்- தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை

Published On 2019-06-13 05:37 GMT   |   Update On 2019-06-13 05:37 GMT
அரபிக்கடலில் உருவாகியுள்ள வாயு புயல் குஜராத்தை நெருங்கி வரும் நிலையில், கடலோர மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
அகமதாபாத்:

அரபிக் கடலில் உருவாகியுள்ள  'வாயு' புயல் அதிதீவிர புயலாக மாறி குஜராத் மாநிலத்தை நெருங்குகிறது. குஜராத்தின் தெற்கு பகுதியில் உள்ள வேரவல் மற்றும் மேற்கில் உள்ள துவாரகா இடையே இன்று பிற்பகலில் புயல் கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது. பின்னர் சவுராஷ்டிரா, கட்ச் கரையோரம் பயணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து புயல் பாதிப்புகளை இயன்றவரை தவிர்க்க குஜராத் அரசு போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  

குஜராத்தின் தாழ்வான பகுதிகளில் இருக்கும் 3 லட்சம் மக்களை அப்பகுதிகளில் இருந்து பேரிடர் மீட்பு பணியினர் அப்புறப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இந்த அதிதீவிர புயலின் திசை மாறியதால் குஜராத் மாநிலத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு இல்லை என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. எனினும், வேரவல், துவாரகா மற்றும் போர்பந்தர் ஆகியவற்றை ஒட்டியப்பகுதிகளில் கடந்து செல்லும் என கூறியுள்ளது. நேரடியாக புயல் தாக்காவிட்டாலும், புயல் கடந்து செல்லும் பாதையில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சவுராஷ்டிரா கரையோரம் புயல் கடந்து செல்லும்போது, மணிக்கு 135 முதல் 160 கிமீ வேகத்தில் காற்று வீசலாம் என்றும், கடலோர மாவட்டங்களான தியு, கிர் சோம்நாத், ஜுனாகர், போர்பந்தர், துவாரகா ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்று வானிலை மைய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.



எனவே, கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. போர்பந்தரில் மட்டும் பேரிடர் மீட்பு படையின் 6 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

குஜராத் மாநிலத்தை புயல் நெருங்கி வருவதால், கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் காரணமாக மகாராஷ்டிர மாநிலம் கொங்கன் பிராந்தியத்தில் உள்ள கடற்கரைகள் மூடப்பட்டு, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News