செய்திகள்

2ஜி தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய சட்ட நிபுணர்களுடன் சி.பி.ஐ தீவிர ஆலோசனை

Published On 2017-12-27 06:37 GMT   |   Update On 2017-12-27 07:07 GMT
2ஜி வழக்கு தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வதற்கு சி.பி.ஐ. சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

புதுடெல்லி:

டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்த 2-ஜி வழக்கில் கனிமொழி, ஆ. ராசா உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதில் தீர்ப்பு கூறிய நீதிபதி சைனி, ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்க துறையினர் உரிய ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வதற்கு சி.பி.ஐ. முயற்சித்து வருகிறது. இது சம்பந்தமாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சி.பி.ஐ. வழக்குகளுக்கு உதவுவதற்காக சட்ட ஆலோசனை குழு ஒன்று சி.பி.ஐ.யில் தனியாக செயல்பட்டு வருகிறது. அவர்கள் மூலம் இந்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்காக சி.பி.ஐ. கோர்ட்டில் இருந்து தீர்ப்பு நகலை பெற்றுள்ளனர். அதில், என்ன அம்சங்கள் கூறப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்து அதற்கு தகுந்த மாதிரி கூடுதல் விவரங்களை சேர்த்து அப்பீல் செய்ய இருக்கிறார்கள்.

இந்த வழக்கில் சி.பி.ஐ. கொடுத்த ஆதாரமாக வாய்மொழி வாங்குமூலமே அதிகமாக இருந்தது. ஆனால் சாட்சிய சட்டப்படி வாய்மொழி வாக்குமூலத்தை எல்லாவற்றிலும் ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது. அதற்கான உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஆனல் இந்த வழக்கில் அதுபோன்ற ஆவணங்கள் முறையாக தாக்கல் செய்யப்படவில்லை.

இதுதான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை ஆவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. எனவே இனி அப்பீல் செய்யும்போது அதுபோன்ற ஆவணங்களையும் இணைப்பது சம்பந்தமாக ஆலோசித்து வருகிறார்கள்.

இதேபோல அமலாக்கத்துறையும் தீர்ப்பை ஆய்வு செய்து வருகிறது. அவர்களும் இதில் அப்பீல் செய்வதற்கு ஆலோசித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News