செய்திகள்

2ஜி லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டதால் ரூ.1,000 கோடி இழப்பீடு கேட்க டெலிபோன் நிறுவனங்கள் முடிவு

Published On 2017-12-22 05:09 GMT   |   Update On 2017-12-22 05:09 GMT
2ஜி வழக்கில் சி.பி.ஐ. தரப்பில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று தீர்ப்பு கூறியதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட டெலிபோன் நிறுவனங்கள் மத்திய அரசிடம் இழப்பீடு கேட்க முடிவு செய்துள்ளன.

புதுடெல்லி:

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த தீர்ப்பால் சி.பி.ஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் தீர்ப்பை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல் செய்ய முடிவு செய்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது சம்பந்தப்பட்ட டெலிபோன் நிறுவனங்களின் லைசென்ஸ்களை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த நிறுவனங்கள் இந்தியாவின் 22 வட்டாரங்களில் செல்போன் சேவைகளை தொடங்க அனுமதி பெற்று இருந்தன. இதற்காக ரூ.1,658 கோடியை மத்திய தகவல் தொடர்புத்துறைக்கு வழங்கின. லைசெனஸ் ரத்து செய்யப்பட்டதால் டெலிபோன் நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்தன.

இந்த நிலையில் நேற்று 2ஜி வழக்கில் சி.பி.ஐ. தரப்பில் குற்றச்சாட்டு நிரூபிக்கப் படவில்லை என்று தீர்ப்பு கூறியதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட டெலிபோன் நிறுவனங்கள் மத்திய அரசிடம் இழப்பீடு கேட்க முடிவு செய்துள்ளன.

2ஜி வழக்கு விசாரணைக்காக டெலிபோன் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் நேற்று தீர்ப்பை கேட்க கோர்ட்டுக்கு வந்து இருந்தனர்.

அப்போது லூப் டெலிகாம் நிறுவனத்தின் வக்கீல்கள் கூறும் போது, “லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டதால் எங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 22 வட்டாரங்களுக்கும் ரூ.1,658 கோடி செலுத்தி இருந்தோம். பாதியில் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டதால் ரூ.1,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே ரூ.1,000 கோடி இழப்பீடு கேட்டு டெலிபோன் விவகாரங்களுக்கான தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரவோம், இல்லையெனில் சர்வதேச நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடருவோம் என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News