search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    • மே 3-ந்தேதி வாரங்கல் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். 4-ந்தேதி மகபூபாத் தொகுதிக்குட்பட்ட 2 இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
    • தொடர்ந்து 5-ந்தேதியும் அவர் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க தனித்துப் போட்டியிடுகிறது. கடந்த 2019 தேர்தலில் 4 இடங்களில் வெற்றி பெற்றது.

    இந்த முறை கூடுதல் இடங்களில் வெற்றி பெற பா.ஜ.க. திட்டமிட்டு அதற்கேற்றவாறு பிரசார பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

    தெலுங்கானாவில் பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி பிரசாரத்தை அடுத்த வாரம் தொடங்குகிறார். 30-ந்தேதி ஜாகீராபாத் தொகுதியில் நடக்கும் பிரசார கூட்டத்தில் பங்கேற்கும் மோடி அன்று மாலை ஸ்ரீரங்கம் பள்ளி தொகுதியில் ஐடி ஊழியர்களுடன் கலந்துரையாடுகிறார்.

    மே 3-ந்தேதி வாரங்கல் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். 4-ந்தேதி மகபூபாத் தொகுதிக்குட்பட்ட 2 இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

    தொடர்ந்து 5-ந்தேதியும் அவர் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    • திடீரென ரெயில் நகரத் தொடங்கியதால் அதிர்ச்சி அடைந்த சிறுவன் இறங்க முடியாமல் தவித்துள்ளான்.
    • சிறுவனை மீட்டு குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்த போலீசார், அச்சிறுவனை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தனர்.

    உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோ ஆலம்நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒளிந்து பிடித்து விளையாடி கொண்டிருந்தான். அப்போது யார் கண்ணிலும் சிக்காமல் இருப்பதற்காக முடிவு செய்த சிறுவன் அங்கு தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரெயில் மீது ஏறி ஒளிந்துள்ளான். ஆனால் திடீரென ரெயில் நகரத் தொடங்கியதால் அதிர்ச்சி அடைந்த சிறுவன் இறங்க முடியாமல் தவித்துள்ளான்.

    பின்னர் ரெயிலின் சக்கரங்களுக்கு இடையே அமர்ந்து அழுதுகொண்டே பயணித்துள்ளான். அந்த ரெயில் ஹர்டோய் ரெயில் நிலையத்தை அடைந்த போது அங்கு வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் சக்கரங்களுக்கு இடையே சிறுவன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அந்த சிறுவனை பத்திரமாக மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுவன் லக்னோவின் ராஜாஜிபுரத்தில் உள்ள பாலாஜி மந்திர் பகுதியை சேர்ந்த அஜய் என்பதும், ரெயில் சக்கரங்களுக்கிடையே அமர்ந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ததும் தெரிய வந்தது. அந்த சிறுவனை மீட்டு குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்த போலீசார், அச்சிறுவனை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தனர்.

    • கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளில் குறிப்பாக அரபு நாடுகளில் வசித்து வருகின்றனர்.
    • ஓட்டுப்போடுவதற்காக கடந்த 2 வாரங்களில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அரபு நாடுகளில் இருந்து தாயகம் திரும்பி உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளில் குறிப்பாக அரபு நாடுகளில் வசித்து வருகின்றனர்.

    மாநிலத்தின் 20 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக கடந்த 2 வாரங்களில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அரபு நாடுகளில் இருந்து தாயகம் திரும்பி உள்ளனர். இன்றும் (வியாழக்கிழமை) அதிகமானோர் வருவார்கள் என கூறப்படுகிறது.

    • தாய் மீது அதிக அன்பு கொண்ட சிறுவனை ஊக்குவிக்கும் வகையில் அவனது தாயின் பிறந்தநாளை நடுவானில் கொண்டாட ஏற்பாடு செய்தனர்.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் சிறுவனின் செயலையும், ஏர் இந்தியா விமான கேபின் குழுவினரையும் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த போது தனது தாயின் பிறந்தநாளை புதுமையாக கொண்டாடி இன்ப அதிர்ச்சி அளித்த சிறுவனின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பொதுவாக பிறந்தநாள் அன்று இரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடுவதை அனைவரும் விரும்புவர். தாயின் பிறந்தநாள் அன்று விமானத்தில் சென்றதால் சிறுவன் நடுவானிலேயே அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க திட்டமிட்டான்.

    அதன்படி விமான கேபின் பணியாளர்களிடம் இதுகுறித்து சிறுவன் கூறினான். அவர்கள், தாய் மீது அதிக அன்பு கொண்ட சிறுவனை ஊக்குவிக்கும் வகையில் அவனது தாயின் பிறந்தநாளை நடுவானில் கொண்டாட ஏற்பாடு செய்தனர். அதன்படி விமான கேபின் பணியாளர் இதுகுறித்து மைக்கில் அறிவிக்கவும், விமான பயணிகள் பலரும் சிறுவனின் தாயாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து பணிப்பெண்கள் ஒரு தட்டில் சாக்லேட்டுகளையும், வாழ்த்து குறிப்புகளையும் கொண்டு வந்து சிறுவனின் தாயாரிடம் கொடுத்து வாழ்த்தினர்.

    இதுதொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி 85 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 4,500-க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்றது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் சிறுவனின் செயலையும், ஏர் இந்தியா விமான கேபின் குழுவினரையும் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.



    • சுரேஷ் கோபி மீதான நம்பிக்கையில் 2019 மக்களவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பாரதிய ஜனதா களம் இறக்கியது.
    • திருச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபி வெற்றிக்கு பாரதிய ஜனதா நிர்வாகிகள் கடுமையாக உழைத்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் ஆட்சி நடத்தி வரும் பாரதிய ஜனதா கட்சி கேரளாவில் எந்த மக்களவை தொகுதியிலும் கால் பதிக்க முடியவில்லை. அதற்கான நடவடிக்கைகளில் கடந்த சில ஆண்டுகளாகவே பாரதிய ஜனதா ஈடுபட்டது. இதற்காக சில திட்டங்களை கேரளாவில் செயல்படுத்தி வருகிறது.

    முக்கியமாக அங்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற நடிகர் சுரேஷ்கோபி மூலமாக அதனை நிறைவேற்ற பாரதிய ஜனதா முடிவு செய்தது. கேரளாவில் 1990-களில் சினிமாவில் உச்சத்தில் இருந்தவர்களில் ஒருவராக சுரேஷ்கோபி இருந்தார். அவர் மீதான நம்பிக்கையில் 2019 மக்களவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பாரதிய ஜனதா களம் இறக்கியது.

    அந்த தேர்தலில் நிலவிய மும்முனை போட்டியில் சுரேஷ்கோபி 3 லட்சம் வாக்குகளை பெற்று 3-வது இடத்தை பிடித்தார். இது கேரளாவில் பாரதிய ஜனதாவின் செல்வாக்கு 11.1 சதவீதத்தில் இருந்து 28.2 சதவீதமாக அதிகரிக்க உதவியது. திருச்சூரில் பாரதிய ஜனதாவின் அதிர்ஷ்டத்தை உயர்த்த பிரதமர் மோடி, சுரேஷ்கோபியை கையில் எடுத்தார்.

    அவருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை வழங்கியது. அந்த பதவி 2022-ம் ஆண்டுடன் முடிவடைந்தது. அதன் பிறகு திருச்சூரில் பாரதிய ஜனதா செல்வாக்கை உயர்த்த பிரதமர் மோடி, சுரேஷ் கோபியை தேர்ந்தெடுத்தார். அவர் மூலம் பல்வேறு பணிகளை பிரதமர் மேற்கொண்டார்.

    இதனை தொடர்ந்து தற்போதைய மக்களவை தேர்தலிலும் திருச்சூர் தொகுதியில் போட்டியிட சுரேஷ்கோபிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. காங்கிரசின் மூத்த தலைவரான முரளீதரன் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு பிரமுகர் சுனில்குமார் ஆகியோரை எதிர்த்து களம் காண்கிறார்.

    திருச்சூர் தொகுதியில் அவரது வெற்றிக்கு பாரதிய ஜனதா நிர்வாகிகள் கடுமையாக உழைத்துள்ளனர். அவரது வெற்றியின் மூலம் கேரளாவில் தனது கணக்கை திறக்க வேண்டும் என்று நம்பிக்கையில் பாரதிய ஜனதா உள்ளது.

    • வெயில் காரணமாக வெளியூர் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது.
    • ரூ.300 டிக்கெட் மற்றும் இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 105 முதல் 107 டிகிரி வரை சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் வீட்டிலிருந்து வெளியே வர அச்சப்படுகின்றனர்.

    திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கடும் வெயில் காரணமாக அவதி அடைந்து வருகின்றனர். வெயில் காரணமாக வெளியூர் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது.

    இன்று தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்பட்டது. ரூ.300 டிக்கெட் மற்றும் இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் 1½ மணி நேரத்தில் தரிசனம் முடிந்து வெளியே வந்தனர். எளிதில் தரிசனம் செய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருப்பதியில் நேற்று 64,080 பேர் தரிசனம் செய்தனர். 25,773 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.66 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • பிரதமர் மோடி பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சியான ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கனவே 4 முறை பிரசாரம் செய்தார்.
    • பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கான பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    பெங்களுரு:

    கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில் முதல் கட்டமாக நாளை (26-ந்தேதி) 14 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது. 2-வது கட்டமாக 14 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (மே-7-ந்தேதி) ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    பிரதமர் மோடி பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சியான ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கனவே 4 முறை பிரசாரம் செய்தார். இந்த நிலையில் மீண்டும் 5-வது முறையாக பிரதமர் மோடி வருகிற 28-ந் தேதி கர்நாடக வருகிறார்.

    மதியம் 1 மணியளவில் தாவணகெரே தொகுதி பா.ஜனதா வேட்பாளர் காயத்ரி சித்தேஷ்வர், ஹாவேரி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பசவராஜ் பொம்மை ஆகியோரை ஆதரித்து நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    • வீடியோ வைரலாகி 81 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் குவித்து வருகிறது.
    • வீடியோவைப் பார்த்த பயனர்கள் பலரும் தர்பூசணிகளை வீணடித்துவிட்டீர்கள் எனவும், மிகப்பெரிய உணவான பிரியாணியை கெடுக்காதீர்கள் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

    சமூக வலைதளங்களில் புதுமையான உணவு தயாரிப்பு தொடர்பாக ஏராளமான வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன. அதில் சில உணவு வகைகள் பயனர்கள் மத்தியில் வரவேற்பையும், சில உணவு வகைகள் விமர்சனத்தையும் ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் தர்பூசணி ஜூஸ் சேர்த்து சிக்கன் பிரியாணி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இன்ஸ்டாகிராமில் பரவி வரும் அந்த வீடியோவில், சில இளைஞர்கள் தர்பூசணி பழங்களை கழுவி, வெட்டும் காட்சிகளுடன் தொடங்குகிறது. பின்னர் அந்த பழங்களை துண்டு, துண்டாக வெட்டி ஜூஸ் தயாரிக்கின்றனர். அது முடிந்ததும், கோழி இறைச்சி வெட்டி ஒரு பெரிய கடாயில் போட்டு எண்ணெய், மசாலா, இஞ்சி, பூண்டு சேர்த்து தயாரிக்கிறார்கள். அதன்பிறகு சிக்கன் கலவையில் தர்பூசணி ஜூஸை சேர்த்து, பாஸ்மதி அரிசி போட்டு பிரியாணி தயாரிக்கும் காட்சிகள் உள்ளது. அந்த வீடியோ வைரலாகி 81 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் குவித்து வருகிறது.

    இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தர்பூசணிகளை வீணடித்துவிட்டீர்கள் எனவும், மிகப்பெரிய உணவான பிரியாணியை கெடுக்காதீர்கள் எனவும் பதிவிட்டு வருகின்றனர். சில பயனர்கள், இது ஒருபோதும் சுவையாக இருக்காது எனவும், இதை சாப்பிட்ட பிறகு ஆம்புலன்சிற்காக காத்திருக்க நேரிடும் எனவும் பதிவிட்டு உள்ளனர்.


    • நாடு முழுவதும் வெப்ப அலை வீசி வருகிறது. இருப்பினும், 7 கட்டமாக தேர்தல் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
    • ராஜ்நாத்சிங்கோ அல்லது நிதின் கட்காரியோ பிரதமர் ஆகியிருக்கலாம்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் போல்பூர் பாராளுமன்ற தொகுதியில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    நாடு முழுவதும் வெப்ப அலை வீசி வருகிறது. இருப்பினும், 7 கட்டமாக தேர்தல் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

    முன்பெல்லாம் மே 2 அல்லது 3-ந்தேதியுடன் தேர்தல் பணிகள் முடிந்து விடும். ஆனால் இந்த ஆண்டு கடுமையான வெயிலுக்கிடையே 3 மாதங்களாக இழுக்கின்றனர்.

    பா.ஜனதாவை திருப்திப்படுத்தவே தேர்தல் கமிஷன் 3 மாத காலத்துக்கு 7 கட்டமாக தேர்தலை ஏற்பாடு செய்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    துர்காபூர்-பர்தாமன் தொகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது:-

    குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

    அவர் தற்போது மோடியின் கருணையால் வாழ்ந்து வருகிறார். தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள மோடிக்கு தினமும் வணக்கம் வைக்கிறார்.

    ராஜ்நாத்சிங்கோ அல்லது நிதின் கட்காரியோ பிரதமர் ஆகியிருக்கலாம். அப்படியென்றால் பிரச்சனை இருக்காது. கொஞ்சமாவது மரியாதை தெரிந்த ஒரு ஜென்டில்மேன் பிரதமர் பதவியில் இருக்கும் திருப்தி கிடைக்கும்.

    ராஜ்நாத்சிங்குக்கு மரியாதையுடன் சொல்லிக் கொள்கிறேன். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, பொது சிவில் சட்டம் ஆகியவற்றை அமல்படுத்துவதை எதிர்ப்போம். நீங்கள் எவ்வளவு வலிமையானவர் என்று பார்த்து விடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 4 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் வன்முறை சம்பங்கள் நடந்தன.
    • வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடந்த அந்த தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டது.

    இடாநகர்:

    அருணாசல பிரதேசத்தின் 2 மக்களவை தொகுதிகள் மற்றும் 50 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் 4 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் வன்முறை சம்பங்கள் நடந்தன.

    வாக்குப்பதிவு எந்திரங்களை சேதப்படுத்துதல், வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடந்த அந்த தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டது.

    அந்த தொகுதிகளில் நேற்று மறுவாக்குப்பதிவு நடந்தது. காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடந்த இந்த தேர்தலில் 79.8 சதவீத வாக்குகள் பதிவாகின.

    • மங்களசூத்திரம் குறித்து பேசுபவர்கள் பதில் சொல்ல வேண்டும்.
    • நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தத் தேர்தலில் கவனமாகப் போராட வேண்டும்.

    புல்வாமா வீரர்களுக்கு ஹெலிகாப்டர் மறுத்து, அவர்களின் மனைவிகளின் தாலிகளைப் பறித்தது யார் என்று பிரதமர் மோடிக்கு சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் டிம்பிள் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

    பிரதமர் மோடியின் 'மங்கள்சூத்ரா' கருத்துக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் டிம்பிள் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது:-

    புல்வாமாவில் தியாகிகளின் மனைவிகளின் மங்களசூத்திரத்தை பறித்தவர்கள் யார் என்று மங்களசூத்திரம் குறித்து பேசுபவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

    வீரர்களுக்கு ஏன் விமானம் கொடுக்கவில்லை என்று சொல்ல வேண்டும். கடந்த 10 வருடங்களாக நம்மை மறக்கடிக்க பல விசித்திரமான பிரச்சினைகளை கொண்டு வருகிறார்கள்.

    இது அரசியல் சாசனத்தைக் காப்பாற்றும் போராட்டம் என்பதால், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தத் தேர்தலில் கவனமாகப் போராட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கட்சிகளை உடைக்கும் விளையாட்டில் இறங்க பா.ஜனதா முயற்சி செய்தும், அதில் வெற்றி பெற முடியவில்லை.
    • எங்கள் கட்சியில் இருந்து இரண்டு எம்.பி.க்களை அவர்கள் இழுத்துக் கொண்டனர்.

    மேற்கு வங்காளத்தில் உள்ள முர்சிதாபாத் மக்களவை தொகுதிக்கான பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜி ரோடு ஷோ நடத்தினார்.

    அப்போது அபிஷேக் பானர்ஜி கூறியதாவது:-

    கட்சிகளை உடைக்கும் விளையாட்டில் இறங்க பா.ஜனதா முயற்சி செய்தும், அதில் வெற்றி பெற முடியவில்லை. எங்கள் கட்சியில் இருந்து இரண்டு எம்.பி.க்களை அவர்கள் இழுத்துக் கொண்டனர். அதற்குப் பதிலாக அவர்களுடைய எம்.பி.க்கள் அர்ஜுன் சிங், பாபுல் சுப்ரியோ எங்கள் கட்சியில் இணைந்தனர்.

    சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனையை பயன்படுத்தி தபாஸ் ராய்-ஐ இணைத்துக் கொண்டது. பா.ஜனதாவின் குறைந்தது டாப் 10 தலைவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைய வரிசையில் உள்ளனர். சரியான நேரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது கதவை திறக்கும். பா.ஜனதா மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்படும்" என்றார்.

    இதற்கு பா.ஜனதா செய்தி தொடர்பாளர் சமிக் பட்டச்சார்யா பதில் கூறுகையில் "இது தொடர்பாக கூறுவதில் ஒன்றுமே இல்லை. மேற்கு வங்காளத்தில் தோல்வியை சந்திக்க இருக்கும் விரக்தியில் அரசியல் சொல்லாடல்தான் இது. மக்களவை தேர்தல் முடிந்த உடன், திரிணாமுல் காங்கிரஸ் அட்டை பெட்டை போல் சிதைந்து போகும்" என்றார்.

    ×