கதம்பம்
கோப்புப்படம்

இதுதான் வாழ்க்கை!- திருப்பூர் கிருஷ்ணன்

Update: 2022-01-10 10:22 GMT
எல்லாம் இறைவன் சித்தம். எது நடந்தாலும் அது நன்மைக்காகத் தான் நடக்கிறது என்ற தத்துவத்தை ஏற்றுக் கொண்டால் அமைதியாக வாழ முடியும். இல்லாவிட்டால் மன நிம்மதி கிட்டாது.
வாழ்க்கையே மூன்று வகையான போக்குகளைக் கொண்டதுதான். அந்த மூன்றையும் எதிர்பார்த்து அந்த  மூன்றில் எதுவந்தாலும் ஏற்கத் தயாராக இருந்துவிட்டால் நிம்மதிக்குக் குறைவே இராது.

இந்த அற்புதமான கருத்தை தாம் எழுதிய ‘நல்வழி’ என்ற நூலில் ஒரு வெண்பாவில் சொல்கிறார் அவ்வையார்.

நாம் ஒன்றை எதிர்பார்க்கிறோம். அது தொடர்பாக மூன்று விஷயங்கள் நேரலாம். ஒன்று அது நாம் விரும்பியவாறே நடக்கலாம். இன்னொன்று அது நடக்காமல் போகலாம். மூன்றாவதாகவும் ஒன்று இருக்கிறது. நாம் முற்றிலும் எதிர்பாராத வேறு ஏதோ ஒன்று திடீரென்று நடக்கலாம்.

எல்லாம் இறைவன் சித்தம். எது நடந்தாலும் அது நன்மைக்காகத் தான் நடக்கிறது என்ற தத்துவத்தை ஏற்றுக் கொண்டால் அமைதியாக வாழ முடியும். இல்லாவிட்டால் மன நிம்மதி கிட்டாது.

இந்த அரிய கருத்தைச் சொல்லி, நல்வழி காட்டும் அவ்வையாரின் ‘நல்வழி’ நூலில் வரும் வெண்பா இதோ:

‘ஒன்றை நினைப்பின் அது ஒழிந்திட்டு ஒன்றாகும்
அன்றி அது வரினும் வந்தெய்தும் ஒன்றை
நினையாது முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்!’


அண்மையில் ஒரு திருமணம் நடந்தது. பலப்பல திருப்பங்களோடு நடந்த விந்தையான திருமணம் அது. ஒரு பெண் ஒருவனைக் காதலித்தாள். அவனையே  மணந்து கொள்ள விரும்பினாள். அவனும் அவளை விரும்பினான். அந்தக் காதலைப் பெற்றோர் ஏற்று, ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் அது.

ஆனால் அந்த மணமகனுக்குத் தெரியாது, இன்னொருவன் அவளை விரும்பினான் என்பது! ஆனால் அந்த இன்னொருவன் காதலை அவள் நிராகரித்து  விட்டாள்.

அவளால் நிராகரிக்கப்பட்டவனும் அவள்மேல் ஒருதலைக் காதல் கொண்டவனுமான அந்த இளைஞனும் அந்தத் திருமணத்திற்கு வந்திருந்தான்.

அவனைப் பற்றி மணநாளன்று அறிந்ததும் மணமகனுக்கு சந்தேகம். அவனும், தான் மணந்து கொள்ளப் போகிறவளும் எப்படியெல்லாம் பழகியிருப்பார்களோ...? அந்த வீண் சந்தேகத்தை முன்னிலைப்படுத்தி, மணமகள் என்ன விளக்கங்கள் சொல்லியும் கேட்காமல், அவளை நிராகரித்து மணமாலையைக் கழற்றி வைத்துவிட்டு மணமேடையிலிருந்து விலகி பார்வையாளர்களோடு உட்கார்ந்துவிட்டான் அந்த மணமகன்!

மணமகளின் விழிகளில் கண்ணீர். பலர் முன்னிலையில் தனக்கு நேர்ந்த அவமானம் அவளை வருந்தச் செய்தது. முக்கியமாகத் தன் பெற்றோருக்கு நேர்ந்த சங்கடமும் துயரமும் அவளைப் பெரிதும் வருத்தின.

ஆனால் அவள் கதறி அழுது ஒரு சராசரிப் பெண்ணைப் போல அந்த மணமகனைக் கெஞ்சத் தயாராக இல்லை. இப்போது சுயமரியாதை நிறைந்த அந்த மணமகளின் மனநிலையில் நியாயமான இரண்டு எண்ணங்கள் எழுந்தன.

ஒன்று மணமேடை வரை வந்து தன்னை நிராகரித்தவனை அவள் மன்னிக்கத் தயாராக இல்லை. அது இயல்பானதுதான். எந்தப் பெண்ணுமே அப்படித்தான் நினைப்பாள்.

இன்னொன்று தன்னை ஒருதலையாகக் காதலித்தவன்தான் இந்தத் திருமணம் நின்று போனதற்குக் காரணமாக இருக்க வேண்டும் என அவள் சரியாகவே ஊகித்தாள்.

இல்லாததும் பொல்லாததுமான வதந்தி அவனால் பரப்பப்பட்டிருக்க வேண்டும். எனவே அவனையும் அவள் மணக்கவோ மன்னிக்கவோ தயாராக இல்லை. அவன்மேல் அவளுக்குக் காதலும் இல்லை.

மணமகளின் பெற்றோர் என்ன செய்வதென்று அறியாத மிக நெருக்கடியான இக்கட்டான சூழல். அந்த நேரத்தில் எங்கிருந்தோ வந்தான் மூன்றாமவன். வெளிதேசத்தில் உள்ள அவர்களின் தூரத்து உறவினன்.


நடந்த அனைத்தையும் அறிந்த அவன், தனக்கு மணமகளைப் பிடித்திருப்பதாகவும் மணமகளுக்கும் தன்னைப் பிடித்திருந்தால், தான் அவளை அங்கேயே அப்போதே மணந்துகொள்ளத் தயார் என்றும் அறிவித்தான்.

மணமகள் தன்னை நன்றாகப் புரிந்துகொண்டு  இக்கட்டிலிருந்து தன்னைக் காப்பாற்ற முன்வந்த அவனையே தான் விரும்புவதாகச் சொல்லி சம்மதித்தாள். அந்த மூன்றாமவனோடு அவள் திருமணம் விமரிசையாக நடைபெற்றது. தான் விரும்பியவன், தன்னை விரும்பியவன் ஆகிய இருவரையும் ஓர் ஏளனப் பார்வை பார்த்துவிட்டுத்  கழுத்துத் தாலியை கம்பீரமாகச் சரிசெய்து கொண்டாள் அவள்!

அவ்வையின் வெண்பாதான் என்ன அழகாக இந்த நிகழ்வுக்குப் பொருந்துகிறது! அந்தப் பெண் முதலில் நினைத்தது நடக்கவில்லை. அதற்கு எதிரானதும் நடக்கவில்லை. முற்றிலும் புதிதாக ஒன்று நடந்திருக்கிறது.

இதுதான் வாழ்க்கை. எனவே இந்த மூன்று வகை அனுபவங்களுக்கும் தயாராக இருங்கள்! என அறிவுறுத்துகிறார் அவ்வையார்.
Tags:    

Similar News