டாக்டர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்குப் பதிலாக அவர்களை மிரட்டும் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
மம்தா ராஜினாமா செய்ய வேண்டும்: எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
பதிவு: ஜூன் 13, 2019 22:03
மேற்கு வங்காளத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால், டாக்டரின் கவனக்குறைவால்தான் நோயாளி இறந்தார் என்று நோயாளியின் உறவினர்கள் மருத்துவம் பார்த்த ஜூனியர் டாக்டரை பலமாக தாக்கினர்.
இதனால் படுகாயமடைந்த ஜூனியர் டாக்டர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜூனியர் டாக்டர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து மற்ற டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி அவர்கள் கடந்த மூன்று நாட்களாக பணியை புறக்கணித்துள்ளனர்.
இதனால் நோயாளிகள் சிகிச்சையின்றி தவித்து வருகின்றனர். எமர்ஜென்சி நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. புறநோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் காத்துக்கிடக்கின்றனர்.
ஆகவே, ஜூனியர் டாக்டர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சுகாராத்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதை விட்டுவிட்டு டாக்டர்களை மிரட்டும் மம்தா, தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
பா.ஜனதா தலைவர் முகுல் ராய் இதுகுறித்து கூறுகையில் ‘‘டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதற்குப் பதிலாக, அவர்களை மம்தா மிரட்டுகிறார். அவரது நடவடிக்கை ஹிட்லரை போன்று சர்வாதிகாரப் போக்காக உள்ளது. இது அவமானகரமானது. முதல்அமைச்சராகவும், சுகாதாரத்துறை அமைச்சராகவும் தனது வேலையில் மம்தா தோற்றுவிட்டார். இதற்கு பொறுப்பேற்று உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.
மேற்கு வங்காள மாநில பாஜக துணைத் தலைவர் ஜெய் பிரகாஷ் மஜும்தார் கூறுகையில் ‘‘இப்படித்தான் டாக்டர்கள் போராட்டத்தை கையாள்வது?. போராட்டத்திற்கு தீர்வு காண்பதை விட்டுவிட்டு டாக்டர்கள் மீதும், பாஜக, மற்ற கட்சிகள் மீது குற்றம் சாட்டுகிறார். அவரால் சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வர முடியாவிடில், அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’’ என்றார்.
சிபிஐ (எம்) கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர் சுஜன் சக்ரபோர்ட்டி கூறுகையில் ‘‘இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அவர் கவனம் செலுத்துகிறாரா? அல்லது இந்த பிரச்சையை அரசியலாக்க விரும்புகிறாரா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அம்மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா ‘‘சட்டம்-ஒழுங்கை சரியாக நிலை நாட்டுவதுதான் மாநில அரசின் வேலை . அதேவேளையில் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதால் டாக்டர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
முதல்வரான மம்தா, இந்த பிரச்சனையை சில கட்சிகள் அரசியலாக்குகின்றன என்று குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :