உள்ளூர் செய்திகள்

கடத்தூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் நர்சுகளுக்கு குடியிருப்பு வசதி இல்லாததால் தவிப்பு

Published On 2022-06-30 10:32 GMT   |   Update On 2022-06-30 10:32 GMT
  • டாக்டர்கள், நர்சுகள் தங்குவதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடியிருப்புகள் சேதம் அடைந்தது.
  • சம்பளத்தில் பெரும்பகுதியை வாட கைக்கே கொடுக்கின்றனர்.

கடத்தூர்,

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா உட்பட்ட கடத்தூரில் அரசு மருத்துவமனையில் மருத்துவமனை அமைந்துள்ளது.

கடத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்து பொதுமக்களும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

அந்தப் பகுதிகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த கர்ப்பிணி தாய்மார்கள் சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர். மேலும் வெளி நோயாளிகளாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நாள்தோறும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகளாக குழந்தை பெற்ற மற்றும் கருத்தடை செய்து கொண்ட தாய்மார்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு அரசு மருத்துவமனை பகுதியில் தங்கும் விடுதிகள் இல்லாததால் வாங்கும் சம்பளத்தில் கணிசமான தொகையை அவர்கள் வாடகைக்கு தங்கும் வீடுகளுக்கு கொடுத்து வருகின்றனர்.

இதனால் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மருத்துவமனை பகுதியில் டாக்டர்கள், நர்சுகள் தங்குவதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அவர்களுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டு அதை பயன்படுத்தி வந்தனர்.

இடையில் போதிய பராமரிப்பு இல்லாத நிலை உருவாகும் வகையில் பணியாற்றியவர்கள் அந்தப் பகுதிகளில் தங்காமல் இருந்ததால் தற்போது அந்த குடியிருப்புகள் பழுதான நிலையிலும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

எனவே தமிழக அரசும் மாவட்ட மருத்துவத் துறையும் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணியாற்றும் நர்சுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

Similar News