உள்ளூர் செய்திகள்

கொடைக்கானல் ஏரியில் குறைந்த அளவே படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்.

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் வியாபாரிகள் கவலை

Published On 2022-09-27 04:55 GMT   |   Update On 2022-09-27 04:55 GMT
  • கொடைக்கானலில் கடந்த இரு வாரங்களாக சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்துள்ளது.
  • கொடைக்கானலில் இதமான சூழல் நிலவுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருைக அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானல்:

கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாக லேசானது முதல் கனமழை பெய்து வந்த நிலையிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாகவே காணப்பட்டது. ஆனால் தற்போது கடந்த இரு வாரங்களாக சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்துள்ளது. தீபாவளி போன்ற முக்கிய பண்டிகை வரும் நிலையில் சிறு குறு வியாபாரிகளின் வியாபாரம் மிகவும் மந்தமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

தீபாவளி வரை இதே போல் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தால் பண்டிகையை கொண்டாட முடியாத நிலை ஏற்படும் என வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கூட சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்து காணப்படுகிறது. ஒரு சில சுற்றுலா தளங்களில் மட்டுமே கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

ஆனால் பெரும்பாலான சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. படகு சவாரி செய்யும் இடத்தில் மிகவும் குறைவான எண்ணிகையே சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்தனர். எதிர் வரும் சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்குமா? என்ற எதிர்பார்ப்பில் சிறு குறு வியாபாரிகள் உள்ளனர்.

தரைத்தளங்களில் அதிகமான மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் கொடைக்கானலில் இதமான சூழல் நிலவுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருைக அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Tags:    

Similar News