உள்ளூர் செய்திகள்

வடகவுஞ்சி பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள்.

கொடைக்கானல் அருகே சமூக அறிவியல் ஆசிரியர் இல்லாமல் தேர்வு நடத்துவதா? மாணவர்கள் வீடியோ வெளியானதால் பரபரப்பு

Published On 2022-09-30 05:11 GMT   |   Update On 2022-09-30 05:11 GMT
  • 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இதுநாள் வரை சமூக அறிவியல் பாடம் நடத்தப்படவில்லை என்று அப்பள்ளி மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்
  • மாணவர்கள் கல்வி பாதிக்காத அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் வடகவுஞ்சியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 100 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது காலாண்டுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இதுநாள் வரை சமூக அறிவியல் பாடம் நடத்தப்படவில்லை என்று அப்பள்ளி மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.

தங்களுக்கு புத்தகங்கள் மட்டும் வழங்கப்பட்டதாகவும் பாடங்களே நடத்தாத நிலையில் அதற்கு தேர்வு வைத்தால் எவ்வாறு எழுதுவது என்று அவர்கள் தெரிவித்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து கொடைக்கானல் கல்வி அதிகாரி பழனிராஜ் தெரிவிக்கையில், பெரும்பாலும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தால் தலைமை ஆசிரியரே அந்த பாடத்தை நடத்துவார். தற்போது வடகவுஞ்சி பள்ளியில் சமூக அறிவியல் பாடமே நடத்தப்படவில்லை என்று மாணவர்கள் தெரிவிப்பது அதிர்ச்சியாக உள்ளது.

அவ்வாறு இருந்தால் ஆசிரியர்களிடம் விசாரிக்கப்படும் என்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நஸ்ருதீன் தெரிவிக்கையில், பாடங்கள் நடத்தவே இல்லை என்று மாணவர்கள் தெரிவிப்பது நம்பும்படியாக இல்லை. கண்டிப்பாக ஏதாவது ஒரு ஆசிரியர் பாடம் நடத்தி இருப்பார்கள். காழ்ப்புணர்ச்சி காரணமாக மாணவர்கள் தெரிவித்ததாக கருதுகிறோம். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.

பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது என்ற புகார் வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக மேல்நிலைப்பள்ளிகளில் குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் இல்லாததால் அந்த பாடப்பிரிவை தேர்வு செய்த மாணவர்கள் வேறு மாவட்டங்களுக்கோ அல்லது வேறு பிரிவை தேர்ந்தெடுத்தோ கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் பற்றாக்குறையை சரி செய்து மாணவர்கள் கல்வி பாதிக்காத அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News