உள்ளூர் செய்திகள்

மத்திய மண்டலத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

Published On 2022-06-29 09:49 GMT   |   Update On 2022-06-29 09:49 GMT
  • திருச்சியை உள்ளடக்கிய மத்திய மண்டலத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா தொற்று சுகாதார துறையினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது
  • வழக்கம் போல் பெரும்பாலான மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் ஹாயாக சுற்றித் திரிகின்றனர்

திருச்சி:

தமிழகத்தில் கடந்த இரு வார காலமாக கொரோனா வைரசின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. திருச்சி, தஞ்சை, கரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மண்டலத்திலும் நாளுக்கு நாள் வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு செல்கிறது.

நேற்றைய பரிசோதனை முடிவுகளில் மத்திய மண்டலத்தில் 81 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் அதிகபட்சமாக திருச்சி மாவட்டத்தில் 42 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் உள்ள மொத்த தொற்றாளர்களில் பாதி பேர் திருச்சியை சேர்ந்தவர்களாக இருப்பது சுகாதாரத் துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சிக்கு அடுத்தபடியாக தஞ்சாவூரில் 11 பேருக்கும், பெரம்பலூரில் 8 பேருக்கும், நாகப்பட்டினத்தில் 7 பேருக்கும், திருவாரூரில் 6 பேருக்கும், கரூர் மற்றும் புதுக்கோட்டையில் தலா மூன்று பேருக்கும், அரியலூரில் ஒருவருக்கும் வைரஸ் உறுதி செய்யப்பட்டது.

இதில் மயிலாடுதுறை மாவட்டம் மட்டும் தப்பியது. அந்த மாவட்டத்தில் நேற்று யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. தற்போதைய நிலையில் திருச்சி மாவட்டத்தில் 163 பேர் கொரோனா வைரசுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கொரோன வைரஸ் வேகம் எடுத்துள்ள நிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இருந்த போதிலும் வழக்கம் போல் பெரும்பாலான மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் ஹாயாக சுற்றித் திரிகின்றனர்.

இது தொடர்பாக கலெக்டர் மா.பிரதீப்குமார் கூறும்போது, திருச்சியில் நகர்ப்புறங்களில் நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. பரவலை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள் போன்ற பொது இடங்களில் பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் முகக்கவசம் அணிதல் மற்றும் நோய் தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றுதலை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி பொது இடங்களில் முகக் கவசம் அணியாத மற்றும் வழிமுறைகளை முறையாக கடைபிடிக்காத பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களின் மீது தற்போது நடைமுறையில் உள்ள தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-ன் படி அபராதம் விதிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

Tags:    

Similar News