உள்ளூர் செய்திகள்

சாலையில் மாட்டை கட்டியவருக்கு அபராதம்-மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை

Published On 2022-06-30 09:55 GMT   |   Update On 2022-06-30 09:55 GMT
  • திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் சாலையில் மாட்டை கட்டி வைத்திருந்த உரிமையாளருக்கு அபராதம் விதித்து ஆணையர் உத்தரவிட்டார்
  • சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளும் பறிமுதல் செய்யப்பட்டு, அதன் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்

திருச்சி:

திருச்சி மாநகர் பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதுடன் அவர்கள் அதை சரியாக கவனித்து வருகிறார்களா என்று தினமும் அதிகாலை நேரங்களில் அதிரடியாக மாநகர் பகுதிகளில் தொடர்ந்து ஆய்விலும் ஈடுபட்டு வருகிறார்.

இதையடுத்து இன்று காலை விசுவாஸ் நகர் பகுதியில் சுகாதாரம் சரியாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வில் ஈடுபட்ட மாநகராட்சி ஆணையர் அந்த பகுதியில் சாலையில் அனுமதியின்றி வைத்திருந்த இறைச்சி கடையை அப்புறப்படுத்தினார்.

மேலும் விசுவாஸ்நகர் பகுதியில் பசு மாடு ஒன்று சாலையில் கட்டியிருப்பதை கண்டு, அந்த மாட்டின் உரிமையாளரை அைழத்து ஆணையர் எச்சரிக்கை தெரிவித்ததுடன் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார்.

அந்த அபராதத்தை மாட்டின் உரிமையாளர் கட்டத்தவறினால் மாட்டினை பறிமுதல் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், இனி சாலைகளில் அனுமதியின்றி சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் தங்களின் கால்நடைகளை வீட்டிற்குள் வைத்து பாதுகாக்காவிட்டால் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளும் பறிமுதல் செய்யப்பட்டு, அதன் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டாமல் மாநகர் பகுதிகளில் பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அவ்வாறு வழங்கினால்தான் தொடர்ந்து மாநகரை தூய்மையாக வைத்திருக்க முடியும் என்றனர். 

Tags:    

Similar News