உள்ளூர் செய்திகள்

கொட்டப்பட்டு குளத்தை தூர்வாரி அழகுபடுத்த மாநகராட்சி திட்டம்

Published On 2022-11-29 11:00 GMT   |   Update On 2022-11-29 11:00 GMT
  • கொட்டப்பட்டு குளத்தை தூர்வாரி அழகுபடுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது
  • திருச்சியில் ரூ.1 கோடி செலவில்

திருச்சி

திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி சர்வதேச விமான நிலையம் அருகாமையில் கொட்டப்பட்டு குளம் அமைந்துள்ளது. சுமார் 74 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குளத்தின் கரைகள் மிகவும் மோசமாக உள்ளன. மேலும் ஆக்கிரமிப்புகளாலும் மழைக்காலங்களில் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்து விடுகிறது.

இந்த நிலையில் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் அந்த குளத்தினை ரூ.1 கோடி செலவில் தூர்வாரி கரைகளை பலப்படுத்தி நீர் நிலையை ரசித்த வண்ணம் குளத்தை சுற்றி வாக்கிங் செல்ல வசதி செய்ய முடிவு செய்துள்ளது. மேலும் தெருவிளக்குகள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

குளத்தினை அழகு படுத்த வருவாய்த் துறையின் அனுமதி பெற இருக்கிறார்கள். இந்த குளத்திற்கு புது கட்டளை மேட்டில் இருந்து வரும் காவிரி நீரும்,கொட்டப்பட்டு பகுதியில் பெய்யும் மழை நீரும் நீராதாரமாக இருக்கிறது. இந்த குளம் நிரம்பும் சூழலில் உபரி நீர் அருகாமையில் இருக்கும் மாவடி குளத்திற்கு திறந்து விடப்படும்.

கடந்த ஆண்டு பெய்த கனமழையில் இந்த குளத்தில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புகளுக்கு வெள்ளம் புகுந்து விட்டது. இந்த நிலையில் கரைகளை பலப்படுத்தி அழகு படுத்தும் திட்டம் குடியிருப்பு வாசிகளுக்கு நிம்மதி அளிப்பதாக அமைந்துள்ளது.

இது தொடர்பாக வெள்ள நீரில் பாதிக்கப்பட்ட ஜெ. கே.நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் கூறும் போது, இந்த குளத்தின் கரைகள் மற்றும் சட்டங்களை புதுப்பிப்பது எங்களுக்கு பெரும் நிவாரணமாக அமையும். அவ்வாறு மேம்படுத்தும் பணிகள் செய்யும்போது கழுவு நீரும் கொட்டப்பட்டு குளத்தில் கலக்காமல் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வெள்ளப்பெருக்கு காலங்களில் வெள்ள நீர் குடியிருப்புகளில் புகாமல் தடுப்பதற்கு கொட்டப்பட்டு மற்றும் மாவடிகுளத்துக்கு இடையே 600 மீட்டர் தூரத்துக்கு சிறிய வாய்க்கால் ஒன்றை வெட்டவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

Tags:    

Similar News