உள்ளூர் செய்திகள்

சேலம் அருகே கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட முதியவரை கத்தியால் குத்திய தபால்காரர் கைது

Published On 2022-08-15 09:32 GMT   |   Update On 2022-08-15 09:32 GMT
  • செந்தில்குமார், அழகுமதி தனியாக இருப்பதை பயன்படுத்தி, பழக்கத்தை ஏற்படுத்தினார்.
  • இதில் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கிருஷ்ணனின் வயிற்றில் சரமாரியாக குத்தினார்.

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள தெத்திகிரிபட்டி கச்சராயனூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 70). கூலி தொழிலாளி. இவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.

விவாகரத்து

இதில் 3-வது மகன் சின்னதம்பி. இவருடைய மனைவி அழகுமதி. இவர்கள் குழந்தையுடன் வசித்து வருகின்றனர். இவர்களது எதிர்வீட்டில் செந்தில்குமார் (வயது 40) என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்.காளிப்பட்டியில் தபால்காரராக உள்ளார்.

இந்த நிலையில் சின்னதம்பிக்கும், அழகுமதிக்கும் இடைேய ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அழகுமதி விவாகரத்து பெற்றார். தற்போது அவர் தனியாக வசித்து வருகிறார்.

கள்ளத்தொடர்பு

இந்த நிலையில் செந்தில்குமார், அழகுமதி தனியாக இருப்பதை பயன்படுத்தி, பழக்கத்தை ஏற்படுத்தினார். ஆனால் முதலில் அழகுமதி, அவருடன் பழகுவதை தவிர்த்து வந்தார். இதனால் செந்தில்குமார் தொடர்ந்து ஆசைவார்த்தைகளை அள்ளிவிட்டு, அவரை தன்வசப்படுத்தினார். பின்னர் கள்ளத்தொடர்பாக மாறியது.

இதை அறிந்த மாமனார் கிருஷ்ணன், பலமுறை கண்டித்தார். ஆனால் தபால்காரர் செந்தில்குமார் கேட்கவில்லை. அதுபோல் தனக்கு குழந்தை உள்ளது, அதனால் தன்னுடன் பழக வேண்டாம் என அழகுமதி தெரிவித்தும், அவர் கேட்கவில்லை.

கத்திக்குத்து

இதனிடையே சம்பவத்தன்று செந்தில்குமார், அழகுமதியிடம் பேசிக்கொண்டிருந்தார். இதனை பார்த்த கிருஷ்ணன், செந்தில்குமாரை கண்டித்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கிருஷ்ணனின் வயிற்றில் சரமாரியாக குத்தினார்.

இதில் குடல் வெளியே வந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கிருஷ்ணனை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தபால்காரர் கைது

இது குறித்த புகாரின்பேரில் மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான செந்தில்குமாரை தேடி வந்தனர். மேலும், மத்திய அரசு ஊழியர் என்பதால் அவர் பணியாற்றி வந்த எம்.காளிப்பட்டியில் உள்ள தபால் நிலையத்தில் இது பற்றி போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர் தபால் நிலையத்துக்கு வந்தால் தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீசார் கேட்டுக்கொண்டனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த தபால்காரர் செந்தில்குமார் இன்று போலீசாரிடம் பிடிபட்டார். அவரை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவடைந்ததும், அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்கு உட்படுத்தி, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ெஜயிலில் அடைக்க உள்ளனர்.

Tags:    

Similar News