உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

உரிமம் இல்லாத விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை - விதை ஆய்வுத்துறையினர் எச்சரிக்கை

Published On 2022-11-26 10:26 GMT   |   Update On 2022-11-26 10:26 GMT
  • தரமான விதைகளை உரிய விலையில் விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத்துறை செயல்பட்டு வருகிறது.
  • விற்பனை ரசீதில் உள்ள விபரங்களும், விதை விபர அட்டையில் உள்ள விபரங்களும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வதோடு அதில் விவசாயிகள் கையொப்பமிட்டு வாங்க வேண்டும்.

மடத்துக்குளம்:

உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் 157 விதை உரிமம் பெற்ற அரசு மற்றும் அரசு சார்ந்த தனியார் விதை விற்பனை நிலையங்கள் மற்றும் நாற்றுப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. கார்த்திகை பட்டத்தில் நிலக்கடலை உள்ளிட்ட பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள், தரமான விதைகளை அரசு உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும் என விதை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, கோவை விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் கூறியதாவது:-

விவசாயத்திற்கு முக்கியமான இடுபொருள் விதையே ஆகும். தரமான விதைகளை உரிய விலையில் விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத்துறை செயல்பட்டு வருகிறது.சாகுபடிக்கு தேவையான விதைகளை விவசாயிகள் வாங்கும் போது, உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்க வேண்டும்.

விதைகளை வாங்கும் போது, தவறாமல் விதை விபர பட்டியலில் உள்ள பயிர் ரகம், குவியல் எண், காலாவதி நாள், உரிய பருவம் ஆகியவற்றை கவனித்து வாங்க வேண்டும். மேலும் விற்பனை ரசீதில் உள்ள விபரங்களும், விதை விபர அட்டையில் உள்ள விபரங்களும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வதோடு அதில் விவசாயிகள் கையொப்பமிட்டு வாங்க வேண்டும்.

விற்பனை ரசீதினை பயிர் சாகுபடி காலம் முடியும் வரை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.உரிமம் பெறாத ஏஜன்டுகள் வாயிலாகவோ, எண்ணெய் உற்பத்தியாளர்களிடமோ, வெளிமாநில நிலக்கடலை விதைகளை வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். உரிமம் இல்லாமல் நிலக்கடலை விதைகளை விற்பவரின் மீது விதை சட்டங்கள் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.  

Tags:    

Similar News