கோப்புபடம்.
வீடு கட்டி தருவதாக ரூ.1.45 கோடி மோசடி - இளம் பெண் கைது
- வங்கி கடனுடன் வீடு கட்டி தருவதாக விளம்பரம் செய்தனர்.
- 2021 ம் ஆண்டு வழக்கில் தொடர்புடைய மணிமாறன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுாரில் தனியார் புரமோட்டர்ஸ்' நிறுவனம் செயல்பட்டு வந்தது. நிறுவனத்தின் உரிமையாளர் திருமுருகன்பூண்டியை சேர்ந்த மணிமாறன் (46), சுகன்யா உள்ளிட்ட சிலர், பொதுமக்களிடம் சிறிய தொகை கட்டினால் வங்கி கடனுடன் வீடு கட்டி தருவதாக விளம்பரம் செய்தனர். இதன் மூலமாக, 83 பேரிடமிருந்து, ஒரு கோடியே, 45 லட்சத்து, 11 ஆயிரத்து, 520 ரூபாய் வசூல் செய்தனர். ஆனால், உறுதியளித்தபடி வீடு கட்டி தராமல் ஏமாற்றினர்.
இதுதொடர்பாக, சுப்ரமணியன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், திருப்பூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த, 2021 ம் ஆண்டு வழக்கில் தொடர்புடைய மணிமாறன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து தலைமறைவாக இருந்த சுகன்யாவை கடந்த, ஒன்றரை ஆண்டுகளாக போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் திருப்பூர் பூலுவபட்டியில் பதுங்கியிருந்த சுகன்யா, (30) என்பவரை பொருளதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், புரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் இன்னும் புகார் கொடுக்காமல் இருந்தால், திருப்பூர் பொருளாதார குற்றப்பிரிவை அணுகி புகார் கொடுக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.