உள்ளூர் செய்திகள்

கோப்புபடம், 

தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் காய்ச்சல் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டுகோள்

Published On 2022-06-26 08:05 GMT   |   Update On 2022-06-26 08:05 GMT
  • கண்காணிக்காமல் விட்டால் டெங்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.
  • திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.

உடுமலை:

உடுமலை பகுதியில் தென்மேற்கு பருவமழை சீசன் துவங்கியுள்ளது. சில மாதங்கள் நீடிக்கும் இந்த பருவமழை சீசனில் வீடுகள் மற்றும் பிற இடங்களில் மழை நீர் தேங்குவது வழக்கம். இதனால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து, டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்த்தாக்குதல் ஏற்படும் வாய்ப்புள்ளது.எனவே பருவமழை சீசன் துவங்கும் போது உள்ளாட்சி அமைப்புகள் சார்பில்நோய்த்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

ஏடிஸ் கொசுக்கள் நம்மை கடிக்கும் போது டெங்கு உண்டாகிறது. இவை பெரும்பாலும் மாலை அல்லது பகலில்தான் கடிக்கும்.திடீரென கடுமையான காய்ச்சல், அதிகமான தலைவலி, கண்களுக்கு பின்புறம் வலி, கண் விழி சிவந்து, வெளிச்சத்தை பார்க்க முடியாத நிலை, கண் கூசுதல், உடலில் சிவப்புப்புள்ளிகள் தோன்றுவது டெங்கு அறிகுறிகள்.இந்தக் காய்ச்சலின்போது, எலும்பு முறிவு ஏற்பட்டதுபோல கடுமையான எலும்பு வலி ஏற்படும்.

சுகாதாரத்துறையினர் கூறுகையில், துவக்கத்திலே கண்டறிந்து சிகிச்சை முறைகளுக்கு தயாராகினால் 7 நாட்களில் டெங்கு சரியாகிவிடும்.கண்காணிக்காமல் விட்டால் டெங்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை அழித்துவிடும். இவை ரத்தம் உறைவதற்கு உதவக்கூடியவை.ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை குறையும்போது அது நுரையீரல், வயிறு போன்ற உறுப்புகளிலும் பல் ஈறு, சிறுநீர்ப்பாதையிலும் ரத்தக் கசிவை ஏற்படுத்தக்கூடும். உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் உயிரிழப்பும் ஏற்படும்.

டெங்குவிலிருந்து தற்காத்துகொள்ள தடுப்பூசி எதுவும் இல்லை. நாம் வசிக்கும் வாழ்விடங்களில் கொசுக்களை ஒழிப்பது ஒன்றே வழி. லார்வா, கொசு வளர வாய்ப்பு இல்லாதவாறு வீடு, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும்.குடம், தண்ணீர் தொட்டிகளில் சேமித்துவைக்கும் நீரை நன்றாக கொசு புகாதபடி மூடிவைத்துப் பயன்படுத்த வேண்டும். வீட்டுக்குள் கொசு வர முடியாதபடி ஜன்னல்களில் கொசுவலை பொருத்த வேண்டும் என்றனர்.

சில மாவட்டங்களில் டெங்கு அதிகரித்த போதும், திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்கிறார் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார்.அவர் மேலும் கூறுகையில், பொதுமக்கள் முடிந்தவரை குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். மருந்து, மாத்திரை எடுத்துக்கொண்ட பின்பும் 3 நாட்களுக்கு காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் டாக்டரை சந்தித்து, அடுத்த கட்ட பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்என்றார்.பருவமழை சீசன் துவங்கியுள்ள நிலையில் உடுமலை நகராட்சி, பேரூராட்சிகளிலும், ஒன்றிய கிராமங்களிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News