திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் மருந்து வாங்க காத்திருந்த பொதுமக்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் 52 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்
- பொதுமக்களிடையே வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
- மொபைல் குழு மூலம் மருத்துவக் ஆலோசனை வழங்கினர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில், 52 இடங்களில் இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம் சுகாதாரத்துறையால் நடத்தப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பொதுமக்களிடையே வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சைக்காக பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் இன்று ஒரே நாளில் 52 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது.
அதன்படி மாநகராட்சியின் நான்கு மண்டலத்திலும் தலா ஒரு இடம் வீதம், நான்கு இடங்களில் முகாம் உட்பட, 52 இடங்களில் இந்த முகம் காலை முதல் நடைபெற்று. இது தவிர, நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் வட்டாரத்துக்கு ஐந்து பள்ளிகளில் முதல்கட்டமாக காய்ச்சல் முகாம், மொபைல் குழு மூலம் ஆலோசனை வழங்கினர். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறியதாவது:- காய்ச்சல் கண்டறியும் முகாமில் வயதானவர், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள், தொடர் காய்ச்சல் பாதிப்பில் இருப்பவர் உடல் நலம் குறித்து அறியப்படும். ஒரு பகுதியில் அதிக காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர் இருந்தால், அப்பகுதியில் மாஸ்கிளினீங், கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மேற்கொள்ளப்படும். ஏதேனும் உடல்நலக்குறைவு இருந்தால், தங்கள் பகுதியில் நடக்கும் காய்ச்சல் முகாமில் மக்கள் பங்கேற்று, பயன் அடையலாம் என்றார்.