உள்ளூர் செய்திகள்

13 நாட்கள் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்ற பெண்

Published On 2022-06-29 10:03 GMT   |   Update On 2022-06-29 10:03 GMT
  • கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
  • குளிர்பானம் வழங்கி உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.

கருமத்தம்பட்டி :

கருமத்தம்பட்டி அடுத்த கோதப்பாளையம் பகுதியில் அரசூர் முதல் ஈங்கூர் வரையிலான 230 கிலோ வாட் உயர் மின்னழுத்த தடம் செல்கிறது. இந்த மின் தடத்தில் புதிதாக இணைப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் கோதபாளையம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கவாசகம் மற்றும் அவரது மனைவி கிருஷ்ணவேணி க்கு சொந்தமான 50 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் அவர்களது வீட்டின் மேல் இந்த உயர் மின்னழுத்த பாதை செல்கிறது, இந்த மின் பாதை அவர்கள் குடியிருக்கும் வீட்டிற்கு மேலே செல்வதால் பாதிப்பு ஏற்படும் என கூறி கடந்த 13 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் கிருஷ்ணவேணி ஈடுபட்டு வந்தார். அவரது உண்ணாவிரதப் போராட்டத்திற்கு விவசாய சங்கத்தினரும் ஆதரவளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். இதனை அடுத்து 13 நாட்களாக இருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கிருஷ்ணவேணி கைவிட்டார். கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் கிருஷ்ணவேணிக்கு குளிர்பானம் வழங்கி உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன், ஏர்முனை இளைஞர் அணி மாநில துணைத்தலைவர் சுரேஷ் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.  

Tags:    

Similar News