உள்ளூர் செய்திகள்

தஞ்சை உழவர் சந்தையில் தோட்டக்கலைத்துறை வட்டார உதவி இயக்குனர் முத்தமிழ் செல்வி ஆய்வு செய்தார்.

தஞ்சை உழவர் சந்தையில் விரைவில் தோட்டக்கலை சார்பில் டான்ஹோடா விற்பனை நிலையம்

Update: 2022-07-03 10:07 GMT
  • தற்போது உழவர் சந்தையில் மொத்தம் 71 கடைகள் உள்ளது. இவற்றில் 58 கடைகள் செயல்பட்டு வருகின்றன. மீதம் உள்ள 13 கடைகள் அமைக்க விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்த மாத இறுதிக்குள் அனைத்து கடைகளும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
  • தோட்டக்கலை துறையின் கீழ் உள்ள குன்னூர் உணவு பதப்படுத்தும் நிலையத்தில் தயாரித்த ஜாம், ஜெல்லி, ஸ்குவாஸ் மற்றும் ஊறுகாய் ஆகியவை குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள உழவர் சந்தையில் பராமரிப்பு பணிகள் முடிந்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தோட்டக்கலை துறை தஞ்சாவூர் வட்டார உதவி இயக்குநர் முத்தமிழ்ச்செல்வி உழவர் சந்தையில் சார்பில் ஆய்வு செய்து டான்ஹோடா விற்பனை நிலையம் அமைய உள்ள இடத்தையும் பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-தஞ்சை உழவர் சந்தையில் விரைவில் தோட்டக்கலை சார்பில் டான்ஹோடா விற்பனை நிலையம் அமைய உள்ளது.

இந்த விற்பனை நிலையத்தில் மாடித்தோட்டம் அமைப்பதற்கான பாலித்தீன் பைகள், மண்புழு உரங்கள், உயிர் உரங்கள், காய்கறி விதை பொட்டலங்கள், அழகு செடிகள் வளர்ப்பதற்கான தொங்கும் கூடைகள், செடிகளை வெட்டுவதற்கான கத்தரிக்கோல் மற்றும் தோட்டக்கலை துறையின் கீழ் உள்ள குன்னூர் உணவு பதப்படுத்தும் நிலையத்தில் தயாரித்த ஜாம், ஜெல்லி, ஸ்குவாஸ் மற்றும் ஊறுகாய் ஆகியவை குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதனை பொதுமக்கள் அனைவரும் பயன்பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

உழவர் சந்தையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் உழவர் சந்தையை சுற்றியுள்ள காய்கறி சாகுபடி செய்யும் கிராமங்களில் தோட்டக்கலை மற்றும் வேளாண் விற்பனை துறை அலுவலர்கள் இணைந்து விவசாயிகளிடையே கலந்துரையாடி உழவர் சந்தை குறித்தும் தோட்டக்கலை துறை திட்டங்கள் குறித்தும் விளக்கி கூறி, தோட்டக்கலை விளைபொருட்களை சந்தைபடுத்துவதற்கு உழவர் சந்தையை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

தற்போது உழவர் சந்தையில் மொத்தம் 71 கடைகள் உள்ளது. இவற்றில் 58 கடைகள் செயல்பட்டு வருகின்றன. மீதம் உள்ள 13 கடைகள் அமைக்க விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்த மாத இறுதிக்குள் அனைத்து கடைகளும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன் அறிவுறுத்தலின் பேரில் வேங்கராயன் குடிகாடு கிராமத்தில் தோட்டக்கலை உதவி அலுவலர் குடியரசன், வேளாண் விற்பனை துறையின் வேளாண்மை உதவி அலுவலர்கள் அமரேசன், மோனிஷா ஆகியோர் விவசாயிகளிடையே விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றை சந்தைபடுத்தவும் உழவர் சந்தையில் கடைகள் அமைக்கவும் அடையாள அட்டை வழங்கினர்.

Tags:    

Similar News